ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சமாதி அருகே அமைக்கப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதன் பின் அந்த மணிமண்டப வளாகத்தில் முத்தமிழ் மையம் அமைப்பு சார்பில் நாளைய கலாம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஜிபி சந்தோஷ், ‘தப்பாட்டம்’ நாயகன் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர், நடிகர் இமான் அண்ணாச்சி, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ பட இயக்குநர் தயா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பாக சேவை செய்த பள்ளி மாணவர்களுக்கு நாளைய கலாம் விருதும், ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இதையடுத்து ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் பேசும்போது, ‘அப்துல் கலாம் எனக்கு அப்பா மாதிரி. இது எங்க வீட்டு விழா. இவ்விழாவில் கலந்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை ஒவ்வொரு விதத்தில் செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒன்றுக்காக காத்திருக்கிறோம்.
இந்த காத்திருப்பின் வடிவமாக சொர்க்கம் தான் திகழ்கிறது. இந்த சொல் யாருடைய உதடுகளில் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியாது. எந்த புத்தகத்தில் மறைந்து கொண்டிருக்கிறது என்றும் தெரியாது. எந்த காட்சியின் வடிவமாக அது மறைந்து கொண்டிருக்கிறது என்றும் தெரியாது. ஏதோ ஒரு சொல், நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை, மாற்றத்தை தரக்கூடிய சொல்லாக அமையும். அந்த சொல் நம்மை சிகரத்தை நோக்கி அழைத்து செல்லக்கூடிய சொல்லாக இருக்கும்’ என்றார்.
மேலும் ‘முத்தமிழ் மையம்’ அமைப்பு இதுபோன்று பல விழாக்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வாழ்த்தினார் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்.