பப்பி; விமர்சனம் 3/5

Reviews

ருண் மற்றும் சம்யுக்தா ஹேக்டே நடிப்பில் அறிமுக இயக்குனர் மொரட்டு சிங்கிள் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள படம் தான் பப்பி.

இஞ்சினியரிங் கல்லூரி மாணவரான வருண், எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத ஒரு முரட்டு சிங்கிளாக வருகிறார். இவரது நண்பராக வருகிறார் யோகி பாபு. யோகி பாபுவிற்கு மிகப்பெரும் கால்பந்து வீரராக ஆக வேண்டும் என்ற ஆசை.

வருணிற்கு பிங்கி என்ற தனது நாய் மீது தீராத ஒரு பாசம். வருணின் வீட்டருகே புதிதாக குடிவருகிறார் நாயகி சம்யுக்தா. நாயகியை பார்த்த சில நாட்களில் அவர் மீது காதலில் விழுகிறார் நாயகன் வருண். நாயகியும் வருண் மீது காதலில் விழுகிறார்.

இந்த காதலால் கர்ப்பமாகிறார் நாயகி சம்யுக்தா ஹெக்டே.

வருண் அந்த கருவை கலைத்து விடலாம் என்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்  சம்யுக்தா. இறுதியாக என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக முதல் படத்தில் வெற்றித் தடத்தை பதித்திருக்கிறார் வருண். தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். நடனம், காமெடி என இரண்டிலும் புகுந்து விளையாடுகிறார். ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் சற்று ஓவர் ஆக்டிங் போன்று தோன்றியது. மற்றபடி, சரியான கதை தேர்வு எடுத்து படங்கள் நடித்தால் கோலிவுட்டில் உச்சம் தொடுவார் நாயகன் வருண். க்ளைமாக்ஸ் காட்சியில் பப்பியை காப்பாற்ற போராடும் வருணின் நடிப்பில் கண்களில் கண்ணீரை எட்டி பார்க்க வைக்கிறார்.

கோமாளி படத்திற்கு பிறகு நாயகி சம்யுக்தா ஹெக்டேவிற்கு நல்ல ஒரு கதாபாத்திரம் இந்த படத்தில். வருணிற்கு ஏற்ற ஜோடியாக நடித்திருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரும் பலம் வழக்கம்போல் யோகி பாபு தான். நாயகனோடு இவர் அடிக்கும் லூட்டிகள், திரையரங்குகளில் சிரிப்பலையை சிதற வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அவரது கதாபாத்திரத்தை சற்று குணச்சித்திரமாகவும் மாற்றி கைதட்டலை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.

மற்றபடி, நான் கடவுள் ராஜேந்திரன், மாரிமுத்து, நித்யா, வெங்கடேஷ், ரிந்து ரவி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை நிறைவாகவே பூர்த்தி செய்திருக்கின்றனர்.

தரன்குமார் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். பின்னனி இசை படத்தின் கதையோடு நல்ல பயணம்.

ஒளிப்பதிவு தீபக் குமார் பாடி கலர்புல்லான காட்சிகளை கொடுத்திருக்கிறார். யோகிபாபுவின் எண்ட்ரீயாக இருக்கட்டும், மொட்டை ராஜேந்திரனின் எண்ட்ரீயாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் பப்பியை காப்பாற்ற போராடும் காட்சிகளாக இருக்கட்டும் அனைத்திலும் தீபக் குமாரின் ஒளிப்பதிவிற்கு சல்யூட் அடிக்கலாம்.

பெரிதான கதை என்ற ஒன்று இல்லை என்றாலும், இரண்டு மணி நேர பொழுதுபோக்கு படமாக வந்து அனைவரையும் கவர்ந்துள்ளது இந்த பப்பி. அறிமுக இயக்குனர் மொரட்டு சிங்கிளுக்கு பாராட்டுகள்.

பப்பி – மொரட்டு சிங்கிளின் முதல் வெற்றி..!!