அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜி எஸ் டி, டிமானிட்டைசேஷன் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்த வசனங்கள்பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளும் மத்திய அரசின் திட்டங்களைக் குறை கூறும் விதமாக அமைந்துள்ள அத்தகைய வசனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை செளந்தர்ராஜன், எச் ராஜா உள்ளிட்டோர் கருத்துகளை வெளியிட்டனர். மேலும் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் மெர்சலுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருவதோடு காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
தற்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மோடி அவர்களே, தமிழ் திரைப்படம் என்பது தமிழர்களின் ஆழமான கலாச்சாரத்தையும், மொழியையும் பிரதிபலிக்க கூடியது. மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் பெருமைகளை மதிப்பிழக்கச் செய்ய வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.