ரைசா தெரிவித்த திருமணத்தகவல்

News

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் பிரபலமானவர் நமீதா. இந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது வயது 36. தெலுங்கில் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் அறிமுகமானார். சரத்குமாருடன் ‘ஏய்’ படத்தில் நடித்து பிரபலம் ஆனார்.

தொடர்ந்து சத்யராஜுடன் ‘இங்கிலிஷ்காரன்’, விஜய்யுடன் ‘அழகிய தமிழ்மகன்’, அஜித்துடன் ‘பில்லா’ உள்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார். இதனால் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார்.

தற்போது அதிக படங்களில் நடிக்கவில்லை. என்றாலும் நமீதாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது ‘பொட்டு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நமீதா தெலுங்கு மூத்த நடிகர் சரத்பாபுவை திருமணம் செய்யப் போவதாக சில தினங்களுக்கு முன்பு வதந்தி பரவியது. அதை சரத்பாபு மறுத்தார். இப்போது தனது நீண்டகால நண்பர் வீரேந்திராவை மணக்கிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவுடன் கலந்துகொண்ட ரைசா இத்தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் நமீதாவையும் அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பவரையும் அறிமுகம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.

நமீதா திருமணம் பற்றிய விவரங்களை அவர் வெளியிடாமல் அவருடைய தோழி ரைசா வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய முழுவிபரங்கள் நமீதா தரப்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.