“வாசன் புரொடக்சன்” மற்றும் “பர்மா டாக்கீஸ்” தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது பேசிய நாயகி சாந்தினி தமிழரசன்,
“வஞ்சகர் உலகம் படத்தை தொடர்ந்து மீண்டும் இன்னொரு மர்டர் மிஸ்டரி படம். ஆனால் இரண்டுமே வித்தியாசமான கதை. இந்த படத்திம் கதையை கூட கேட்க எனக்கு வாய்ப்பில்லை, உடனே ஓகே சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் படத்தில் நடித்து முடித்தபோது தான் கதாபாத்திரம் பற்றி உணர்ந்தேன். சிரிஷ் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரே டேக்கில் நடிக்கும் நடிகர். ஆனாலும் ஒரு ஷாட்டுக்கு மட்டும் 19 டேக் வாங்கினார். அது என்ன காட்சி என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். யுவன் ஷங்கர் ராஜா என் முதல் படத்தில் ஒரு பாடகராக, எனக்கு ஒரு ஹிட் பாடல் கொடுத்தார், இப்போது இந்த படத்திலும் இசையமைப்பாளராக எனக்கு ஒரு சூப்பர் ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார்” என்றார்
நாயகன் மெட்ரோ சிரிஷ் பேசும்போது,
“இந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு அப்பாவியான முகம் தேவைப்பட்டது, அதற்கு நான் பொருத்தமாக இருந்ததால் நடிக்க உள்ளே வந்தேன். முதல் விஷயம் யுவன் சார் இசை தான் இந்த படத்துக்கு வேணும் என நான் ரொம்ப தீவிரமாக இருந்தேன். தயாரிப்பாளர், இயக்குனர், நான் மூவரும் அவரை போய் சந்தித்தோம். அவர் கதையை கேட்டு உடனே ஒப்புக் கொண்டார். சாந்தினி நல்ல தோழி, நல்ல நடிகை. திடீரென ஒரு இக்கட்டான சூழலில், நான் அழைத்ததற்காக கதையே கேட்காமல் நடிக்க வந்தார். என் மீதும், இயக்குனர் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையை அது காட்டுகிறது. அவர் கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்
இயக்குனர் தரணிதரன் பேசும்போது,
“மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் என் நண்பர், அவர் மூலமாக தான் சிரிஷ் எனக்கு அறிமுகம். நானே இந்த படத்தை தயாரிக்கணும்னு ஆசைப்பட்றேன், எனக்கு நிதி உதவி மட்டும் தேவை என்றேன். தயாரிப்பாளராக சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து விட்டோம். படத்துக்கு அடையாளமாக ஒருவர் வேண்டும் என யோசித்தபோது, யுவன் சார் என் மனதுக்குள் வந்தார். பட்ஜெட் பற்றி யோசித்தோம், என்ன ஆனாலும் சரி முயற்சி செய்து பார்ப்போம் என நினைத்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான தொகையை மட்டுமே கேட்டு, எங்களுக்காக பெரிய உதவியை செய்தார் யுவன். சிரிஷ் நல்ல நடிகர். திட்டமிட்டதை விட குறைந்த நாட்களில் படத்தை முடிக்க அவர் மிகப்பெரிய காரணம். சாந்தினி கற்பூரம் மாதிரி, சொன்னதை சரியாக புரிந்து கொண்டு நடிப்பை கொடுப்பார். தமிழ் தெரிந்த நல்ல நடிகை, அவரே இந்த படத்துக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார். எடிட்டர் இந்த படத்தில் தான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டியது, அதற்குள் மேயாத மான் ரிலீஸ் ஆகி பிரபலமாகியிருக்கிறார். கலை இயக்குனர் கபிலன் ஒரு இலங்கை தமிழர், சென்னைக்கும் இலங்கைக்கும் பறந்து பறந்து வேலை செய்திருக்கிறார். நிறைய நல்ல உள்ளங்களின் ஆதரவால் தான் இந்த அளவுக்கு வந்திருக்கிறது. 8 மாதத்தில் படத்தை முடித்து விட்டோம். ரிலீஸ் தேதியை நாம் முடிவு செய்தாலும் அதை இந்த சினிமாவில் சாத்தியப்படுத்த முடிவதில்லை. இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும்” என்றார்.
இந்த சந்திப்பில் கலை இயக்குனர் கபிலன், எடிட்டர் முகமது அலி, நடிகர் விஜய் சத்யா, ஜெயக்குமார், தயாரிப்பாளர் சக்திவாசன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.