நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ம் தேதி முதல் சந்தித்து வருகிறார்.
இந்த சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க இருப்பதாகக் கூறியிருந்தார்.
இதனால் இன்று காலையிலேயே மண்டபத்திற்கு வந்து குவிந்திருந்த ஏராளமான ரசிகர்கள், ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மண்டபத்திற்குள் சென்ற ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பேசிய போது, “கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். ரசிகர்கள் இந்த அளவுக்கு கட்டுப்பாட்டோடு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அரசியலுக்கு வருவதைப் பார்த்து பயம் இல்லை. மீடியாவைப் பார்த்து தான் பயம். நான் எதையாவது சொல்ல அது விவாதமாகிவிடுகிறது.
நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லை. நான் பணம், பெயர் மற்றும் புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை.
கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆயிரம் மடங்கு அதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போது அரசியல் கெட்டுப்போய்விட்டது, ஜனநாயகம் சீர்கெட்டுப் போய்விட்டது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். சாதி, மத பேதமில்லாத ஒரு ஆன்மீக அரசியலைக் கொண்டு வர வேண்டும் என்பது எனது நோக்கம்.” என்றார்.
இந்த செய்தியை அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.