ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
”ரஜினிகாந்துக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரம் இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான அந்த மாபெரும் கலைஞரை அவமதிக்கும் விதமாக கஜினிகாந்த் என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி ஞானவேல் ராஜாவுக்கு ஒட்டுமொத்த திரைத் துறையின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினிகாந்த் என்பது வெறும் பெயரல்ல. நான்கு தலைமுறையத் தாண்டிய தமிழ் சினிமாவின் உழைப்பு, அடையாளம், நம்பிக்கை. இந்திய சினிமாவை, குறிப்பாக தமிழ் சினிமாவையும் அதன் வர்த்தகத்தையும் உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்ற உச்ச நட்சத்திரம் அவர்.
இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, இந்திய சினிமா தாண்டி, உலக அளவில் கலைஞர்களும் தலைவர்களும் வாழ்த்தியும் கொண்டாடியும் மகிழும் இந்தத் தருணத்தை அசிங்கப்படுத்தும் நோக்கில், அவர் பெயரின் முதல் எழுத்தைத் திரித்து ‘கஜினிகாந்த்’ என தான் தயாரிக்கும் ஆபாசப் படத்துக்கு தலைப்பிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர் ரஜினிகாந்த். அவரை அவமதிக்கும் இந்தத் தலைப்பை நடிகர் சங்கம் எப்படி மவுனமாக அனுமதிக்கிறது? ரஜினி ரசிகன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஆர்யா இந்தப் படத்தில் நடிப்பது எத்தனை கபடமான செயல்!
சமூக அக்கறையும் இளைய தலைமுறையினரை நெறிப்படுத்துவதில் ஆர்வமும் காட்டும் மூத்த கலைஞர் சிவகுமார் போன்றவர்கள் இதனை எப்படி அனுமதிக்கிறார்கள்? இந்த நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினரான உலகநாயகன் கமல்ஹாசன் இந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?
‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பல்லு படாம பாத்துக்கணும்’, ‘பஜனைக்கு வாங்க’ போன்ற முகம் சுளிக்கும் தலைப்புகளை வைத்து படங்களைத் தயாரித்து வரும் ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளர் சங்கம் கண்டிக்காமல் அனுமதிப்பது வேதனை அளிக்கிறது. இனி இதுபோன்ற தலைப்புகளை தமிழ் சினிமாவில் யாருக்கும் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.