தமிழக மக்களால் “சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் தற்போது பெரிய தலைவர்கள் யாரும் இல்லாமல் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல் ரஜினி ரசிகர்களும் “தலைவா… அரசியலுக்கு வா.. தலைவா வா” என்று அழைத்தபடி இருக்கின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்பு, ரசிகர்களின் அழைப்பினை ஏற்கும் விதமாக ரஜினி அரசியிலில் ஈடுபட விரும்புவது போல் பேசி வருகிறார். அதாவது கடந்த வாரத்தில் ரஜினியுடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரசிகர்கள் முன்பு உரையாற்றிய ரஜினி, அரசியலுக்கு வருவது போல் பிடிகொடுக்காமல் பேசினார்.
ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. அரசியல் பிரமுகர்களில் ஒருசிலர் ரஜினியை அரசியலுக்கு வர வேண்டாம் என்றும், ரஜினியை தங்களது கட்சியில் சேரச் சொல்லியும் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதன் ஒருபகுதியாக ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்ற பேரவை கட்சித் தலைவி வீரலட்சுமி சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. ரஜினி வீடு இருக்கும் போயஸ் கார்டனை நோக்கி நடத்தப்பட்ட இந்த பேரணியில் ரஜினியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் ரஜினி ரசிகர்கள் இன்று பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் பங்கேற்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.