படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பட அதிபர்கள் கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர். இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்றும் அறிவித்து உள்ளனர்.
இதனால், படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர். பெப்சி தொழிலாளர்களும் வேலை இழக்கும் வருத்தத்தில் உள்ளனர். தியேட்டர் அதிபர்கள் கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-ந் தேதி முதல் திரையரங்குகளை மூடுகிறார்கள். இந்த ஸ்டிரைக்கால் திரையுலகம் முடங்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே., ரஜினி, கமலுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியலுக்கு உயர்த்திக் கொண்ட உச்ச நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். ஏற்றி விட்ட ஏணி இப்போது சீக்கு வந்த யானையாக தவிக்கிறது. நீங்கள் இருவரும் ஆண்டு அனுபவித்து ஆஸ்தி சேர்க்க அனைத்துமாக இருந்த திரைப்படத் துறையின் இன்றைய இன்னல்களை உங்கள் சேவையால், பார்வையால் காப்பாற்ற ஏதேனும் செய்து விட்டு உங்கள் அரசியல் பயணத்தை துவங்குங்கள்.
நாங்களும் உடன் இருப்போம். யோசித்து உடனே வாருங்கள். கவலையோடு அல்லாடிக்கொண்டிருக்கிறது கலைக்குடும்பம்… கோடம்பாக்க சேவையே இப்போதைய தேவை.
இவ்வாறு கூறியிருக்கிறார்.