பெரிய குழியாக வெட்டி, தானாகவே போய் படுத்துக் கொண்ட கதையாகி விடும் போல தமிழ் சினிமாவின் நிலை. ஏற்கனவே வெளிவந்த பெரிய நடிகர்களின் படங்கள் உட்பட முக்கால்வாசி படங்கள் புட்டுக் கொண்டது மட்டுமல்லாமல், பல தயாரிப்பாளார்களின் கோவணத்தை முதற்கொண்டு உருவிக்கொண்டு ஓடவிட்டது. விட்ட கோவணத்தையாவது இந்த படத்தில் பிடித்து விடுவோம் என்றுதான் பல தயாரிப்பாளர்கள் மீண்டும் பெரிய நடிகர்களையே கோழி அமுக்குவது போல் அமுக்கி நடிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் தான் பொறுத்தது போதும் என தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சிலர் பொங்கி எழ வேறு வழியே இல்லாமல் “ஒற்றுமையே பலம்” என்று மற்ற தயாரிப்பாளர்களும் கியூப்-கு எதிராக மல்லுக்கட்டத் தயாரானார்கள். ஆனால் ஒரு வாரம், இரண்டு வாரம் ஆக்ரோசமாக பாய்ந்த தயாரிப்பாளார்கள், நாளாக நாளாக “ஆத்தீ வசமா மாட்டிக்கிட்டோமோ” என விழி பிதுங்கி கிடக்கிறார்கள். அதுவும் ஒரு மாதம் தாண்டி ஸ்ட்ரைக் முடியாமல் இழுக்கவும், கழுத்தை நெறிக்கக் காத்திருக்கும் கந்துவட்டி தொல்லையை நினைத்தும் கலக்கம் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
“இப்படியே போனா வேலைக்கே ஆகாது” என சுதாரித்தவர்களாகத் தான், முதலமைச்சரை உள்ளே பஞ்சாயத்துக்கு இழுத்து விடலாம் என நினைத்து “4-ஆம் தேதி கோட்டை நோக்கி பேரணி” என அறிவித்தார்கள். ஒருத்தனுக்கு சுழி சரியில்லைன்னா, சுழற்றி சுழற்றி அடிக்குமே?!. அப்படித்தான் ஸ்டெர்லைட், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற பிரச்சனைகளுக்காக ஒட்டுமொத்த தமிழகமே அதிரத் தொடங்கியது.
ஏற்கனவே சினிமாக்காரனைக் கண்டால் புகைந்து தள்ளும் மக்களிடத்தில், எதையுமே கண்டு கொள்ளாமல் பேரணி போனால் ஊறவைத்து அடிப்பார்கள் என சுதாரித்துக் கொண்டு அமைதியானார்கள். ஆனாலும் காவிரிக்காக குரல் கொடுத்தே ஆக வேண்டுமே?, இல்லையென்றால் பிற்காலத்தில் திரையுலக பிரச்சினைகளை மக்களிடத்தில் பேசவே முடியாதல்லவா?. அதனால் தான் கூடிப் பேசி 8-ஆம் தேதி காவிரிக்காக உண்ணாவிரதம் இருப்போம் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.
இதில் சிக்கல் என்னவென்றால் ரஜினி-கமல் இருவரும் நடிகர்களாக கலந்து கொள்வார்களா? இல்லை அரசியல்வாதியாக கலந்து கொள்வார்களா? என எல்லோரும் கேட்டுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், காவிரி சம்பந்தமாக இதுவரை வாயே திறக்காத அஜித்-விஜய் இருவரும் இதில் கலந்து கொள்வார்களா? என தெரியாமல் ஒருபக்கம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இது வரையில் இந்த ஸ்ட்ரைக் சம்பந்தமாகக் கூட இவர்கள் நால்வரும் ஏதுமே பேசவில்லை எனும் போது, இந்த உண்ணாவிரதத்தையும் உப்புசப்பு இல்லாததாய் ஊத்தி மூடி விடுவார்களோ? என கலக்கத்தோடு இருக்கிறார்கள்.
எது எப்படியோ, இந்த உண்ணாவிரதத்திலாவது இவர்களது ஒற்றுமை ஓங்குமா? என்பதைப் பார்க்க இன்னும் 2 நாட்கள் தான் இருக்கிறது. வீ ஆர் வெயிட்டிங்!!