நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான நேற்று அவருடைய மணிமண்டபம் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த விழாவில் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசன் குடும்பத்தினருடன், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி, நாசர், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் திரளான ரசிகர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஓ.பி.எஸ். மிகவும் அதிர்ஷ்டசாலி. அது பல முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது.
இப்படித்தான் நடிக்க வேண்டும். இப்படித்தான் வசனம் பேசவேண்டும் என்று இருந்த கால கட்டத்தில் நடிப்பு, வசன உச்சரிப்பில், நடையில், பாவனையில் ஒரு புரட்சியையே உண்டாக்கிய அவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள நடிகர்களும் இந்த மாதிரி ஒரு நடிகரை பார்க்க முடியாது, அப்படி நடிக்கவும் முடியாது என்று சொல்லி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகர் சிவாஜி.
ஒரு நடிகராக மட்டும் இருந்திருந்தால் மணிமண்டபம் கட்டியிருக்க மாட்டார்கள். அவர் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி. ஏன் அவருக்கென்று மணிமண்டபம், ஏன் அவருக்கென்று சிலை என்று சொன்னால் நடிப்பு துறையில் இருந்து, அவரது நடிப்பு ஆற்றலில் இருந்து சுதந்திரத்துக்கு பாடுபட்ட வரலாற்று நாயகர்களையும், அவர்களுடைய வரலாற்றையும் படமாக்கி அவர்களின் கதையை தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சென்று சேர்த்தவர்.
சிவபுராணம், கந்த புராணம், போன்ற படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்தவர். அதனால் தான் அவருக்கென்று இந்த மணி மண்டபம்.
கடவுள் மறுப்பு கொள்கை உச்சத்தில் இருந்த போது நெற்றியில் விபூதி போட்டு தன்னுடைய நடிப்பு ஆற்றலை மட்டுமே நம்பி உச்சத்தை தொட்டார் சிவாஜி. அதற்காக இந்த மணிமண்டபம்.
நாம் இறந்த பிறகு மண்ணுடன் மண்ணாய் செல்வதை பார்க்கிறோம். இறந்த பிறகு சாம்பலாவதை பார்க்கிறோம். ஆனால் பல கோடியில் ஒருவர் தான் இறந்த பிறகு சிலையாக போவார்கள். அவரவர் வீட்டில் சிலை வைத்துக் கொள்ளலாம். அது இல்லை. மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிலை. அப்படிப்பட்ட ஒரு மகானுடன் நாம் பழகி இருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை.
இது அரசியல், சினிமா துறை இரண்டும் கலந்த ஒரு விழா. சிவாஜி நடிப்பில் மட்டும் இல்லை அரசியலிலும் அவர் அவரது ஜூனியர்களுக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். அவர் அரசியலில் நின்று அவரது தொகுதியிலேயே தோற்றுபோய் விட்டார். அது அவருக்கு நடந்த அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம். இதில் ஒரு செய்தி சொல்லிவிட்டு போயிருக்கிறார். அரசியலில் இருந்து வெற்றியடைய வேண்டும் என்றால் சினிமா, பெயர், புகழ், செல்வாக்கு இருந்தால் மட்டும் போதாது. அதற்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு சத்தியமாக தெரியாது. அது கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன். தெரிந்தாலும் எனக்கு சொல்ல மாட்டார். ஒரு வேளை 2 மாதத்துக்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ?
இல்லண்ணே. நீங்கள் திரையுலக மூத்த அண்ணன். நீங்க என்கிட்ட சொல்லணும். சொல்லுங்க. நான் திரையுலகில் உங்களுக்கு தம்பி என்று சொன்னால் என்கூட வா சொல்கிறேன் என்கிறார்.
இது ஒரு அருமையான விழா. இந்த மணி மண்டபத்தை கட்டிக்கொடுத்த அமரர் புரட்சித்தலைவிக்கு திரையுலகம் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அந்த சிலையை உருவாக்குவதற்கு காரணமான கலைஞருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர்களுக்கு நன்றி சொல்கிறேன். இந்த மணிமண்டபம் உருவாவதற்கும் சிலை உருவாவதற்கும் சிவாஜி குடும்பத்தினர் ராம்குமார், பிரபு ஆகியோரின் விடா முயற்சி தான் காரணம். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.