ரசிகர்களுடனான சந்திப்பு குறித்து ட்விட் செய்த ரஜினி

News

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

அறிவித்தபடி, மே 15ஆம் தேதி காலை 8 மணி முதலே கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபத்தில் ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு நடைபெறத் துவங்கியது.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, ரசிகர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பில் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது பேச்சு அமைந்திருந்தது.

தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்ற ரஜினியின் ரசிகர்களுடனான சந்திப்பு, அவரின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புகள் வருமா என்பதை நோக்கியே இருந்தது. அதன்படி, சந்திப்பின் முதல் நாளிலேயே, அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக வருவேன். என்ன பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பேன் என்று கூறினார்.

அவருடைய பேச்சுக்கு பலரும் தங்களுடைய ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் ரஜினியின் அரசியல் வருகை குறித்த விவாதங்களும் வலுத்தது.

இறுதி நாளான இன்று, தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்துப் பேசிய ரஜினிகாந்த், “போர் வரும் போது களத்தில் இறங்குவேன் இந்த மண்ணுக்காக; அதுவரை பொறுமை காப்போம்.” என்று கூறி அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

5 நாட்களாக நடைபெற்று வந்த சந்திப்பு நிகழ்ச்சியில், ரசிகர்கள் கலந்து கொண்டு, ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ரஜினியுடனான சந்திப்பும், ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சும் ரசிகர்களிடம் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.

5 நாட்கள் நடந்த ரசிகர்களுடனான சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் ட்விட்டரில், ரசிகர்களுடனான சந்திப்பு, மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும், மறக்கமுடியாத ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.