இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “காலா” திரைப்படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பிறகு ரஜினி கட்சி தொடங்கி, தீவிர அரசியலில் களம் காணுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ரஜினியோடு விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிப்பதாகவும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியானது. இதனால் ரஜினியின் அரசியல் பிரவேசம் மேலும் தள்ளிப் போடப்பட்டது.
இதனிடையே அமெரிக்காவுக்கு சென்று, சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.இதற்காக வருகிற ஜூன் 3-ஆம் தேதி டெல்லிக்கு செல்லவிருக்கிறார். அங்கிருந்து டேஹ்ராடூனில் நடக்கும் படப்பிடிப்பில் குழுவினரோடு இணைகிறார். ஒரே மூச்சில் படப்பிடிப்பினை முடித்து இவ்வருடத்தின் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.