கர்நாடக மாநிலத்தில் ராமோஜி ராவுக்கும், ரமாபாய்க்கும் நான்காவதாக பிறந்த குழந்தை தான், சூப்பர் ஸ்டார் என்று எல்லோராலும் கொண்டாடப்படும், நாடு போற்றும் நடிகரான ரஜினிகாந்த்.
சிவாஜி ராவ் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த், படிப்பை முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றிக் கொண்டே, மேடை நாடகங்களில் நடிக்கவும் செய்தார்.
திரைப்படத்துறையில் கால்பதிக்கும் நோக்கத்துடன், சென்னை வந்த அவருக்கு இயக்குநர் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஒரு சில வருடங்களிலேயே கமல்ஹாசனின் 16 வயதினிலே திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி பட்டையைக் கிளப்பினார்.
இதனைத் தொடர்ந்து, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் கதையின் நாயகனாக மற்றும் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரங்களில் தோன்றி அசத்தினார்.
பில்லா, பொல்லாதவன், மூன்று முகம், தில்லு முல்லு, வேலைக்காரன் போன்ற வசூல் குவிக்கும் பல திரைப்படங்களில் நடித்த அவர், மற்ற நாயகர்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவுக்கு, தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு, தன்னுடைய காந்தப்பார்வையால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
அதன் பிறகு வெளியான அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா போன்ற மாபெரும் வெற்றித் திரைப்படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிக்கும் திரைப்படங்களில் இடம்பெறும் பஞ்ச் வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
உடல் நலக்குறைவு காரணமாக சில வருட இடைவெளி எடுத்துக்கொண்டு, சந்திரமுகி படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியவர், கொஞ்சமும் சுறுசுறுப்பாக குறையாமல் தற்போது காலா, எந்திரன் 2.0 படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.
அவர் இன்று, தமிழ்த் திரையுலகில் 42 வருடங்களைக் கடந்து, 43 வது வருடப் பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் ரஜினி ஓர் அபூர்வ ராகம் தான்.
இப்போது மட்டுமல்ல, இனி வரும் காலங்களிலும் மக்களால் ரசிக்கக்கூடிய, நினைவு கூறத்தக்க நாயகர்களில் ஒருவராக ரஜினிகாந்தும் இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.