நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களைத் திரட்டி அரசியலில் ஈடுபடுவது குறித்து சூசகமாக அறிவித்ததால் அவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகள் விவாதங்கள் நடத்தி தற்போது இறுதி முடிவுக்கு அவர் வந்து இருக்கிறார்.
கைவசம் உள்ள பட வேலைகளை முடித்து விட்டு இன்னும் ஒரு மாதத்தில் முழு நேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ரஜினிகாந்த் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் திருச்சியில் நடந்த மாநாட்டில் பேசும்போது 3 நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தை சந்தித்ததாகவும் அப்போது அரசியலில் ஈடுபட முடிவு எடுத்து விட்டேன். அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான தருணம் என்று தன்னிடம் அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இதன்மூலம் தமிழக அரசியல் வட்டாரம் மீண்டும் பரபரப்பாகி உள்ளது. ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் தனது கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திராவிட பெயரை கட்சியில் இணைப்பதா? தேசிய கட்சிகள் சாயலில் பெயர் வைப்பதா? என்று யோசிப்பதாக கூறப்படுகிறது.
கட்சிக்கு சில பெயர்களை முடிவு செய்து வைத்து இருப்பதாகவும் இறுதியாக அதில் ஒன்றைத் தேர்வு செய்வார் என்றும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
அதுபோல் கொடி, சின்னத்தையும் தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. வறுமை, வேலை இல்லா திண்டாட்டங்கள் ஒழிப்பு, நதிநீர் இணைப்பு என்று கட்சிக்கான புதிய புதிய கொள்கை திட்டங்களை உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். தமிழக நதிகளை இணைப்பது பிரதான கொள்கையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.