பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரண்டாம் முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. இப்படத்தின் பாடல்களை காலை 9 மணிக்கு தயாரிப்பாளர் தனுஷ் இணையத்தில் வெளியிட்டார். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியிருந்த அத்தனை பாடல்களிலும் அரசியல்.. அரசியல்.. அரசியல். வேகமாக பாடல்களனைத்தும் வைரலாகிய போதே, சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியது.
“காலா படத்தின் பாடல்கள் சமூக அமைதியை கெடுக்குமாறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் பேசுமளவிற்கு பாடல்களில் அரசியல் தெறித்தது.
இந்நிலையில் தான் “காலா” படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாபெரும் கட்சி மாநாடு போல நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர்கள், தொழிற்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் தனுஷ் என அனைவரும் பேசிய பிறகு பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மேடையேறினார் ரஜினி. அப்போது அவர் பேசும் போது,
“இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி தான். சிவாஜிக்கு பின்னர் ரோபோ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் உடல் நலம் மோசமானதால் படத்தின் வெற்றியை கொண்டாடவில்லை. பின்னர் ராணா படம் சரியாக போகவில்லை. பின்னர் லிங்கா பண்ணோம். அதுவும் சரியாக போகவில்லை. இவ்வாறு தோல்விகள் தொடர்ந்தது. உடனே ரஜினி அவ்வுளோ தான். முடிஞ்சு போச்சுனு சொன்னாங்க. 40 வருசமாக சொல்றாங்க, அவர்களையும் தப்பு சால்ல முடியாது. வயிறு எரியத்தானே செய்யும்.
அந்த சூழ்நிலையில் தான் காலத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்தேன். அப்போது சவுந்தர்யா அறிமுகம் செய்து வைத்தவர் தான் இரஞ்சித். அவரிடம் முதல்முறை பேசும்போதே, அவரது குணாதிசயம் பிடித்துப் போனது. அவர் சொன்ன டான் கதை எனக்கு புதியதாக இருந்தது. ரஞ்சித் சந்தர்ப்பவாதி இல்லை, அவர் திறமைமேல் அவருக்கு நம்பிக்கை இருந்தது. “கபாலி” தாணு சொன்னது போல் வெற்றிப் படமாகியது.
பினன்ர் “வுண்டர்பார்” தயாரிப்பில் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். பின்னர் வெற்றிமாறன் ஒரு கதை சொன்னார், கதை எனக்கு பிடித்தது, அது முழு அரசியல் படம். நான் அப்போது அரசியலுக்கு வரவில்லை. எனவே அந்த படத்தில் நடிக்கவில்லை.
பிறகு தான், மறுபடியும் ரஞ்சித்தை கூப்பிட்டேன். பல மாதங்கள் மும்பை தாராவியில் தங்கி “காலா” கதையை தயார் செய்து கொண்டு வந்தார். அவருக்கு இந்த சமூகத்தின் மீது இருப்பது வெறும் அன்பு மட்டும் கிடையாது. இங்கு நடப்பவற்றைப் பார்த்து அப்படியே நொந்து நொந்து போகக் கூடிய ஒரு மனிதர். எப்போதும் சமத்துவம், மனிதம் என்று ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய சிந்தனையாளர். நிச்சயம் அவர் வெறும் இயக்குநராக மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள மாட்டார்” என்று இயக்குநர் பா.இரஞ்சித்தை பாராட்டிப் பேசினார்.
இறுதியாக, “அரசியல் பற்றி பேசுவதற்கு இன்னும் தேதி வரவில்லை. அப்படி நேரம் வரும்போது நிச்சயம் அரசியல் பேசுவேன்” என்று முடித்தார்.