நடிகர் ரஜினிகாந்த் 2 மாதங்கள் ரசிகர்கள் சந்திப்பு, காலா படப்பிடிப்பு என்று ஓய்வில்லாமல் இருந்ததால் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இதனால் மும்பையில் விறுவிறுப்பாக நடந்த காலா படப்பிடிப்பில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி இரவு திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
ஏற்கனவே ‘கபாலி’ படம் முடிந்தபோதும் அவர் அமெரிக்காவுக்கு சென்று ஓய்வு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் தங்கி இருக்கும் அவர் மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டதாகவும், ரஜினிகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் ரஜினிகாந்த் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் முற்றுகையிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். அவருடன் செல்பியும் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு காரில் பயணித்தபோது ரஜினியே தன்னை செல்பியில் படமாக்கிய வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. அங்குள்ள விமான நிலையத்தில் ரசிகைகள் அவருடன் போட்டி போட்டு செல்பி எடுத்துக்கொண்டனர்.
மேலும் சில நாட்கள் அமெரிக்காவில் தங்கி இருக்கும் ரஜினிகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்பி மீண்டும் காலா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி பகுதியை அரங்காக அமைத்து உள்ளனர்.
அங்கு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி முடிக்க இயக்குனர் பா.ரஞ்சித் திட்டமிட்டு உள்ளார். இந்த வருடம் இறுதியில் ‘காலா’ படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘2.0’ படத்தின் தொழில்நுட்ப வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன.
இந்த படம் 3டியில் ரூ.400 கோடி செலவில் தயாராகி உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் ஜப்பான், சீன மொழிகளிலும் வெளிவர இருக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழாவை அக்டோபர் மாதம் துபாயில் நடத்த உள்ளனர். ஜனவரி 25-ந் தேதி 2.0 படம் திரைக்கு வருகிறது.