full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மீனவர்கள் மீது சிங்களப்படை மீண்டும் தாக்குதல்: அரசு என்ன செய்யப்போகிறது? – இராமதாஸ் அறிக்கை

உலகில் தாக்கப்படுவதற்காகவே பிறந்தவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் தானோ என்று நினைக்கும் அளவுக்கு சிங்களப் படையினரால் அவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நேற்றுத் தாக்கப்பட்டது இதை உறுதி செய்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த 6-ஆம் தேதி இலங்கைக் கடற்படையினர் நடத்தியத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் இன்னொரு மீனவர் உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளார். சிங்களக் கடற்படையினரின் இத்தாக்குதலைக் கண்டித்து 11 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மீனவர்கள் நேற்று முன்நாள் தான் வங்கக்கடலுக்கு மீண்டும் மீன் பிடிப்பதற்காகச் சென்றனர்.

கச்சத்தீவு அருகில் நேற்று அதிகாலை தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு படகுகளில் வந்த சிங்களக் கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்களை வீசியும், தடிகளால் அடித்தும் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சில மீனவர்கள் காயமடைந்த நிலையில், அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3000-க்கும் மேற்பட்ட மீனவர்களும் உயிருக்கு பயந்து உடனடியாக கரை திரும்பினர். மீன் பிடிக்காமல் கரை திரும்பியதால் மீன் பிடிக்குச் செல்வதற்காக செலவிட்ட தொகையைக் கூட மீனவர்களால் எடுக்க முடியவில்லை.

நாகை முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் சிங்களப்படையினரால் தாக்கப்படுவது அல்லது கைது செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் சிங்களக் கடற்படையினரால் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

அவர்களுடன் பேச்சு நடத்திய மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.இராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும், தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும், இப்பிரச்சினை குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அதை நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிட்டனர். தமிழக மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இலங்கை அரசை இந்தியா தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் மீது இனியொருமுறை தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்திருந்தால், நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்காது.

ஆனால், சொந்த நாட்டு மக்களை விட அண்டை நாடு தான் நட்பு நாடு என நினைத்துக் கொண்டு, அதற்கு ஆதரவாக செயல்படுவதால் தான் தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து துணிச்சலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். சொந்த நாட்டு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை அந்த நாட்டு அரசே வேடிக்கைப் பார்க்கும் கொடுமை தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் நடக்காது. கேரள மீனவர்கள் தாக்கப்பட்டாலோ, குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்டாலோ ஒட்டுமொத்த இந்தியாவும், மத்திய அரசும் கொந்தளிக்கும் போது, தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டால் மட்டும் அதை யாரும் கண்டு கொள்ள மறுப்பது ஏன்? என்பதைத் தான் தமிழக மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவது ஒருபுறமென்றால், மற்றொருபுறம் தமிழக அரசு அக்கறை காட்ட மறுப்பது தான் மிகுந்த வேதனையளிக்கிறது. மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா வழியில் கடிதம் எழுதினால் மட்டும் தீர்வு ஏற்பட்டு விடாது. இவ்விஷயத்தில் தமிழகத்தின் மனநிலை என்பதை மத்திய அரசுக்கு புரியும் வகையில் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதலுக்கு முடிவு கட்ட முடியும்.

மீனவர் பிரிட்ஜோ படுகொலை தொடர்பாக இலங்கை கடற்படை மீது தமிழகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. ஏற்கனவே நடந்த தாக்குதல்கள் தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அந்த வழக்குகள் அனைத்தையும் தூசு தட்டி எடுத்து இயல்பான மேல்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒத்துழைக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவை ஒருபுறமிருக்க வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக தமிழக காவல்துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுவை அனுப்புவது குறித்தும் ஆராய வேண்டும். தமிழக காவல்துறைக் குழு கடலில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே செல்லமுடியும் என்றாலும் கூட, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு எதையும் செய்யும் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காகவாவது இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.