சிவாஜிகணேசனின் 16-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிலையின் அருகில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிவாஜி சிலைக்கு அவரது மகன் ராம்குமார், பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் சூளை ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவாஜி சமூக நல பேரவை சார்பில் அதன் தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.
நடிகர் சங்கம் சார்பில் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்.வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக சிவாஜி கணேசன் வீட்டிலும் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.
சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்த வந்த ராம்குமாரிடம் சிவாஜி கணேசன் சிலை வேறு இடத்துக்கு மாற்றப்படுவது குறித்து நிருபர்கள் கேட்ட போது, “நடிகர் திலகம் சிவாஜி சிலையை எங்கு அமைத்தாலும் சந்தோஷம்தான். அவர் மக்கள் மனதில் நிறைந்து இருக்கிறார். சிவாஜி மணி மண்டபம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.
அரசும், அதிகாரிகளும் எங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இன்று அவரது 16-வது ஆண்டு நினைவு நாள்.
எல்லோர் மனதிலும் அவர் நிறைந்து இருக்கிறார். அவரது சிலையை கடற்கரையில் அமைத்தாலும் மகிழ்ச்சி. மணி மண்டபத்தில் அமைத்தாலும் மகிழ்ச்சிதான். அரசு, நீதிமன்றம் ஆகியவற்றுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.” என்றார்.