14-வது ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனது வேட்புமனுவை கடந்த 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோரது முன்னிலையில் தாக்கல் செய்தார்.
தனக்கு ஆதரவு அளித்த கட்சி தலைவர்களையும், அந்தந்த கட்சிகளின் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆதரவு திரட்டுவதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தனித்தனியாக சந்தித்துப் பேசி ஆதரவு கேட்கிறார்.
மேலும் அ.தி.மு.க. (அம்மா) அணி எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள், அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இந்த சந்திப்பு முடிந்தவுடன் நாளை இரவு 8 மணிக்கு ராம்நாத் கோவிந்த் டெல்லி திரும்ப திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் நாளை சென்னை வருகிறார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளார்.