‘பாகுபலி’ படத்திற்கு பிறகு ராணா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நான் ஆணையிட்டால்’. இதில் ராணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் கேத்ரின் தெரசா, ஜெகன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் ராணா, ஜெகன், மயில்சாமி, சிவாஜி, இயக்குனர் தேஜா ஆகியோர் கலந்து கொண்டனர்…
ஜெகன் பேசும்போது, எனக்கு இந்த படம் மிகவும் சர்ப்ரைஸ். இயக்குனர் தேஜா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரைப்பற்றி தெரிந்துக் கொள்ள கூகுளில் தேடினேன். அப்போதுதான் தெரிந்தது, தெலுங்கில் ‘ஜெயம்’ படத்தை இயக்கியவர் என்று. ஜெயம் ரவியின், ஜெயம்க்கு சொந்தக்காரர் இந்த தேஜாதான்.
இயக்குனர் தேஜா பேசும்போது, ‘நான் சென்னையில் பிறந்தேன். கேமராமேனாகி மும்பைக்கு சென்றேன். அங்கே பல படங்களுக்கு வேலைப் பார்த்தேன். பின்னர் தெலுங்கில் பல படங்களை இயக்கியுள்ளேன். எனக்கு ஒரு நடிகருக்கு ஏற்ற கதையை உருவாக்க தெரியாது. கதை உருவாக்கி அதில் சிறந்த நடிகரைத் தேர்வு செய்ய தெரியும். அப்படித்தான் ‘நான் ஆணையிட்டால்’ கதையை உருவாக்கினேன். அதன்பின் இந்த கதாபாத்திரத்திற்கு ராணா தான் பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தேன். நான் எம்ஜிஆரைப் பார்த்து வளர்ந்தவன். எம்ஜிஆர் தலைப்பில் படம் எடுக்க நினைத்தேன். இந்த படத்தில் ஒரு வசனம் ‘100 எம்.எல்.ஏக்களை தூக்கி கொண்டு போய், ரெசார்ட்ல வைத்தால் நானும் முதலமைச்சர் ஆவேன்’ என்று ராணா பேசுவார். இது நாங்கள் எதார்த்தமாக வைத்தது. ஆனால், அதுபோல, சூழ்நிலை தமிழ்நாட்டில் நிகழ்ந்தது எங்களுக்கு ஆச்சரியம் அளித்தது. கடந்த வருடமே இந்த படத்தைத் தொடங்கினேன். தற்போது ஆட்சியில் நடக்கின்ற போக்கை எம்.ஜி.ஆர் தற்போது இருந்தால் எப்படி கையாலுவாரோ அப்படிப்பட்ட திரைப்படம் தான் ‘நான் ஆணையிட்டால்’ இதில் நடிகர் ராணா எம்.ஜி.ஆர் ஆக நடித்திருக்கிறார். என்றார்.
ராணா பேசும்போது, ‘வார், போர் சம்மந்தப்பட்ட படங்களில் நடித்து வந்தேன். தற்போது அரசியல் படத்தில் நடித்துள்ளேன். இது அரசியல் மட்டுமல்ல, காதல் சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. இப்படம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும்’ என்றார்.