full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :

ரங்கூன் – விமர்சனம்

பர்மாவின் ரங்கூனிலிருந்து தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சென்னை வருகிறார் நாயகன் கவுதம் கார்த்திக். மூவரும் சென்னையில் அடகு கடை நடத்திவரும் சித்திக்கின் கடையில் எடுபிடி வேலைக்கு சேர்கிறார்கள். கவுதமின் வேலை சித்திக்குக்கு பிடித்துப் போகிறது. ஒரு பிரச்சினையில் சித்திக்கின் மகளுக்கும், சித்திக்கின் உயிருக்கும் ஆபத்து வரும் போது கவுதம் காப்பாற்றுகிறார். இதனால், கவுதம் மீதான சித்திக்கின் பாசம் அதிகமாகிறது.

இன்னொரு புறம் கவுதமை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத நாயகி சானா, அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, காதலிக்கத் தொடங்குகிறார். இந்நிலையில், தங்க கடத்தல் வேலையை செய்தால் வாழ்க்கையில் எளிதில் முன்னேறலாம் என்று சித்திக்கும், கவுதமும் கருதுகிறார்கள்.

தொடக்கத்தில் சிறிது சிறிதாக தங்க கடத்தல் வேலைகளை செய்யும் அவர்கள், ஒருகட்டத்தில் பெரிய கடத்தல் ஒன்றை செய்துவிட்டு செட்டிலாகிவிட முடிவு செய்கிறார்கள். அதன்படி, பர்மாவில் அதிக அளவிலான தங்கத்தை கைமாற்றிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் வேளையில் இவர்களது பணம் காணாமல் போகிறது.

பணம் காணாமல் போனதால் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்த பணம் எங்கே போனது? அவர்களுக்கு மீண்டும் அந்த பணம் கிடைத்ததா? பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

தனக்கேற்ற கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார் கவுதம் கார்த்தி. அதேபோல், லோக்கல் பாஷை, அழுக்கு படிந்த முகம் என அச்சு அசல் குப்பத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கவுதமின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

அறிமுக நாயகியாக இருந்தாலும் கூட, சானா மக்பல் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் கூடுதல் அழகாக தெரிகிறார். அடகு கடை அதிபராக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக், அனுபவ நடிப்பை எதார்த்தமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, படத்திற்காக இவர் தேர்வு செய்த லொக்கேஷன்கள் எல்லாம் ரொம்பவும் அழகாக இருக்கிறது. படத்திற்கான அவரது உழைப்பு, ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போதே தெரிகிறது.

அனிஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் ரங்கூனை காட்டியிருக்கும் விதம் அழகோ அழகு. இரவிலும், பகலிலும் ரங்கூனின் அழகை நமது கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. விக்ரமின் இசையில் பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது. அன்பறிவு சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

சினிமாவின் பார்வையில் ‘ரங்கூன்’ – சுற்றுலாத்தளம்