ரத்னம் திரைப்பட விமர்சனம்!
தமிழ் சினிமாவில் ஒருசில கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கூட்டணி தான் இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ரத்னம் படத்தில் இணைந்துள்ளது. பரபர ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி. விஷாலின் அம்மா சிறுவயதிலேயே தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். ஒரு நாள் சமுத்திரக்கனியை கொலை செய்ய வருபவரை கொன்றுவிட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் விஷால் பெரியவன் ஆகி வெளியே வருகிறார். தற்போது எம்எல்ஏ வாக மாறியுள்ள சமுத்திரக்கனி உடன் இருந்து ரவுடியிஸம் செய்து வருகிறார். கொள்கைக்காக கொலை செய்யும் தொழில் விஷாலுக்கு. ஒருபுறம் ஆந்திராவில் தனது தம்பிகளுடன் சேர்ந்து மிகப் பெரிய தாதாவாக இருக்கிறார் முரளி சர்மா. நர்சிங் படித்துள்ள நாயகி பிரியா பவானி சங்கர் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் அரசு கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார். இந்த நிலையில் நாயகியை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. அவர்களிடம் நாயகியை விஷால் காப்பாற்றுகிறார். நாயகியை நாயகன் காப்பாற்ற காரணம் என்ன? ஏன் அவர்கள் நாயகியை துரத்துகிறார்கள்? நாயகனின் பின்புலம் என்ன என்பதை பரபர ஆக்ஷன் உடன் சொல்லியுள்ளார் இயக்குனர் ஹரி.
ஹரி படங்கள் எப்போதும் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படமும் இருக்கிறது. ஆனால் ஒருசில விஷயங்களில் ஹரி அப்டேட் ஆகியுள்ளார் என்பது படத்தில் தெரிகிறது. அந்த ஐந்து நிமிட சிங்கிள் ஷாட் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. விஷால் பரபரப்புடன் எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார். சீரியஷான காட்சிகளில் சற்று தடுமாறுகிறார். யோகி பாபு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். நாயகி பிரியா பவானி சங்கர் அழகாக இருக்கிறார். தேர்ந்த நடிப்பால் கவர்கிறார். அவரை சுற்றித்தான் கதை நகர்கிறது. ஹரி இந்த முறை நல்ல கதையை தேர்வு செய்துள்ளார். லாஜிக் இல்லாத திரைக்கதை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் நன்று. பின்னணி இசை ஹை டெசிபல் சவுண்ட். சுகுமாரின் கேமரா கதைக்கு தேவையான டோனை கொடுத்துள்ளது. சண்டைக் காட்சிகள் மிகவும் சிரத்தையுடன் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் முழுவதும் ரத்தம் தெறிக்கிறது. இத்தனை வன்முறை தேவையில்லை. முதல்பாதி கதையை நகர்த்த போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டாலும் இடைவேளை வரை பரபரப்பு குறையாமல் நகர்கிறது. விஷாலின் பின்கதையும் அம்மா சென்டிமென்ட் காட்சிகளும் சற்று கூடுதல் கவனத்துடன் எடுத்து இருக்கலாம். விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர். மொத்தத்தில் ரத்னம் – ரத்தம். ரேட்டிங் 3.5/5