அஜித், சிறுத்தை சிவா வெற்றிக்கூட்டணியில் உருவாகி வெளிவந்த படம் விவேகம்.
இப்படம் எடுக்கப்பட்ட விதம் மற்றும் அஜித்தின் உழைப்பு பற்றி பலரும் பாராட்டி வரும் நிலையில், இப்படத்தின் மீதான யூடியூப் சேனலில் ப்ளு சட்டைக்காரர் செய்த விமர்சனம், ரசிகர்களிடையேயும், திரைப்படக் கலைஞர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அவரது விமர்சனத்திற்கு எதிராக பலரும் தங்களது கருத்துகளையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவியரசுவும் வீடியோவாக அவரது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
அதில், “விவேகம் படத்திற்கான உங்களுடைய விமர்சனத்தைப் பார்த்தேன். உங்களுடைய சினிமா அறிவுக்கு எட்டியபடி தான் நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் அது போலத் தான் மக்களும், ரசிகர்களும் இருப்பார்கள் என்று எண்ண வேண்டியதில்லை.
உங்களுக்கு சினிமா குறித்த அடிப்படை தெரியவில்லை. தெரிந்திருந்தால் உங்களுடைய விமர்சனம் இந்தளவுக்கு மோசமானதாக இருந்திருக்காது. விவேகம் படத்தின் விமர்சனத்தை மட்டும் பார்த்து இதைக் கூறவில்லை. தொடர்ந்து அனைத்து படங்களின் மீதான உங்களின் விமர்சனத்தையும் பார்த்திருக்கிறேன்.
பொதுவாக, மீடியாவில் பேசும் போது, அடிப்படை நாகரீகம் என்று ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
உங்களால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் தான் உங்களைத் தூண்டிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் உங்களுக்கு சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீது ஒரு விதமான வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஒன்று செய்யுங்கள். நீங்கள் யாரிடமாவது உதவி இயக்குநராக சேருங்கள் அல்லது கதாநாயகனாக நடியுங்கள். அப்படி செய்துவிட்டால் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டு விடும் என்று நினைக்கிறேன்.
சாதாரணமாக நீங்கள் செய்யும் உங்களின் விமர்சனம், அது எத்தனை பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.” என்று பேசியுள்ளார்.