ரெபெல் – திரைவிமர்சனம்
தமிழனுக்கு எங்குயெல்லாம் போராட்டம் இருக்கவில்லை தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கு நடந்த போராட்டத்தை சொல்லும் படம் ரெபெல் இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒரு கதை தேவையா என்ற ஒரு கேள்விக்குறியில் தான் இந்த படம் ஆரம்பிக்கிறது.
ஜி வி பிரகாஷ்குமார், மமிதா பைஜு, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, வெங்கடேஷ், சுப்ரமணியன் சிவா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகி இன்று திரை கண்டிருக்கும் திரைப்படம் தான் இந்த ரெபல்…
ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கதைக்குள் போகலாம் …
1980 களில் மூணாறு பகுதியில் நடைபெறும்படியாக கதை நகர்கிறது. ஜி வி பிரகாஷ் மற்றும் ஆதித்யா பாஸ்கர் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். இவர்களது பெற்றோர்கள் அங்குள்ள டீ எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
ஜி வி பிரகாஷுக்கும் ஆதித்யாவிற்கும் பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், இருவரும் அந்த கல்லூரியில் படிக்கச் செல்கின்றனர். அங்கு, தமிழக மாணவர்களுக்கு தனி விடுதி இருக்கிறது. அங்கு இருவரும் தங்கி கொள்கின்றனர். இவர்களோடு கல்லூரி வினோத் உட்பட தமிழக மாணவர்கள் அனைவரும் இவர்களோடு நண்பர்களாக சேர்ந்து கொள்கின்றனர்.
வந்த முதல்நாளே மலையாள மாணவர்களால் ரேக்கிங் செய்யப்படுகின்றனர் தமிழக மாணவர்கள். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தமிழக மாணவர்களை கண்டாலே விரட்டி விரட்டி அடிக்கின்றனர்.
தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் இவர்களில் ஆதித்யா, மலையாள மாணவர்களால் அடித்துக் கொல்லப்படுகிறார்.
இதனால் வெகுண்டு எழும் ஜி வி பிரகாஷ் தமிழக மாணவர்களை திரட்டி என்ன செய்தார்.? தமிழர்களின் உரிமை அந்த இடத்தில் மீட்கப்பட்டதா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஜி வி பிரகாஷ்எப்போதும் போல தன் திறமையை முழுமையாக காட்டியுள்ளார். கதைக்கேற்ற கதாபாத்திரமாக ஜொலித்திருக்கிறார். பல இடங்களில் தனது நடிப்பின் முத்திரையை பதித்திருக்கிறார். காதல், எமோஷன்ஸ், ஆக்ஷன், கோபம் என பல பரிமாணங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.கதையின் தன்மை அறிந்து உணர்ந்து நடித்துள்ளார்.
ஆக்ஷன் காட்சிகளில் இவரின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது. நாயகி மமிதா, கல்லூரியில் உடன் படிக்கும் மாணவியாக வருகிறார். பெரிதான ஸ்கோப் படத்தில் இல்லையென்றாலும், தோன்றிய காட்சிகளில் க்யூட்டாக தனது நடிப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.ஒரு நல்ல நடிகையை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது வருத்தம்.
கருணாஸ் எப்போதும் போல தன் தனி நடிப்பு திறமை மூலம் கதைக்கு உயிர் தந்துள்ளார்.கருணாஸின் வசனங்கள் கைதட்டும்படியாக ரசிக்கும்படியாக் இருந்தாலும், திணித்து கூறும்படியாக இருந்தது சற்று ஏற்றுக்கொள்ளமுடியாமல் போனது.
தொடர்ந்து நடித்த நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரமாகவே மாறி தங்களது கேரக்டர்களை அளவோடு செய்து முடித்திருந்தனர்.
இடைவேளை காட்சியில் இசைக்கப்பட்ட பின்னணி இசை ரசிக்கும்படியாக இருந்தது. படத்திற்கு ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
படம் ஆரம்பிக்கப்பட்ட மூலக்கதை என்னவோ பலமாக இருந்தது, ஆனால், கதை நகர நகர பெரிதான ஒரு ஈர்ப்பை கதையால் கொடுக்க முடியவில்லை.
ஹீரோயிசம் இரண்டாம் பாதியில் அதிகமாக எட்டிப் பார்த்ததால், கதைக்கான வாழ்வியலில் இருந்து அதிகமாகவே விலகிச் சென்று விட்டது கதை.
முதலில் இனத்தால் பிரித்து காட்டி நகரும் கதையானது பின்பு கட்சி தேர்தல் என்று நகர ஆரம்பித்துவிட்டது.
ஜி வி பிரகாஷ் தனது உயிர் நண்பனை இழந்த பிறகும் அமைதியாக இருந்து, பின் வேகமெடுப்பது என கதையில் பல தடுமாற்றம் இருந்ததை உணர முடிந்தது.
வசனங்கள் பலமாக இருந்தாலும், திணித்து வைக்கப்பட்டது சற்று சலிப்பை ஏற்படுத்திவிட்டது.
பலமான கதையும் பலவீனமான திரைக்கதையுமாய் ரெபல் முடிவுக்கு வந்தது.
ரெபெல் மொத்தத்தில் கொஞ்சம் ஜவ்வு
ரெபெல் – திரைவிமர்சனம