ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த ‘பாகுபலி-2’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 4 நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.
இந்தியாவில் ரூ.490 கோடியும், வெளிநாடுகளில் ரூ.135 கோடியும் வசூலித்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து இருக்கிறது. இந்தியில் அதிக வசூல் படங்களின் சாதனை பட்டியலில் இருந்த ‘தங்கல்,’ ‘சுல்தான்’ ஆகிய இரண்டு படங்களின் வசூல் சாதனைகளையும் ‘பாகுபலி-2’ முறியடித்து உள்ளதாக இந்தி டைரக்டர் கரண் ஜோகர் தெரிவித்து உள்ளார்.
பாகுபலி-2 படத்துக்கு இயக்குனர் ராஜமெளலி ரூ.100 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய மொழி டைரக்டர்கள் யாரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினிகாந்தை வைத்து ராஜமெளலி அடுத்த படத்தை இயக்குவது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் ஏற்கனவே ‘பாகுபலி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது, “ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க ஆர்வமாக இருக்கிறேன். நான் தமிழில் நேரடியாக படம் இயக்கினால் அது ரஜினிகாந்த் படமாகத்தான் இருக்கும். அவருடன் பணிபுரிய வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை” என்று குறிப்பிட்டார். இருவரும் இணைந்தால் அந்த படம் உலகம் முழுவதும் வசூலில் சரித்திர சாதனை நிகழ்த்தும் படமாக இருக்கும் என்று பட உலகினர் கூறுகிறார்கள்.
ரஜினிகாந்தும் ‘பாகுபலி-2’ இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள படம் என்று டுவிட்டரில் பாராட்டி உள்ளார். எனவே இருவரும் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இதுகுறித்து கூறும்போது, “ரஜினிகாந்தும், ராஜமெளலியும் ஒரு படத்தில் இணைந்தால், அந்த படத்தின் வசூல், உலக அளவில் முதல் இடத்தில் இருக்கின்ற ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ படத்தின் சாதனையை பின்னுக்கு தள்ளிவிடும்” என்று தெரிவித்து உள்ளார்.