full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை

இன்று (21.02.2020) சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர் அவர்கள், செயலாளர் திரு. மன்னன் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

நேற்று 20.02.2020 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர் அவர்கள், செயலாளர் திரு. மன்னன் அவர்கள் மற்றும் நிர்வாகிகளும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் இரு தரப்பினர் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

1. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் இரு தரப்பினரும் இணைந்து மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிப்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

2. தர்பார் திரைப்படத்தினை விநியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் அந்த திரைப்படத்தில் பங்குபெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் அவர்களிடம் தார்மீக ரீதியில் அணுகி மேற்படி பிரச்சனை குறித்து பேசி சுமூக தீர்வு காண்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

3. புதிய திரைப்படம் வெளியாகி 8-வார காலத்திற்கு முன்பு Digital Platform என்று அழைக்கப்படும் Amazon, Netflix போன்றவற்றில் வெளியிட கூடாது என்றும், தற்போது பாலிவுட்டில் பின்பற்றப்படும் நடைமுறை போலவே இங்கு தமிழகத்திலும் பின்பற்றபட வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

4. புதிய திரைப்படம் வெளியாகி 100-நாட்களுக்கு முன்பாக எந்த ஒரு Satellite Channel-களிலும் அந்த திரைப்படம் ஒளிபரப்ப கூடாது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

5. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம், மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கட்டண விகிதாச்சாரத்தியும் (Terms) சரிசெய்ய தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள் ஆக மொத்தம் 18-நபர்கள் என கொண்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு அதனை இனிவரும் காலங்களில் முறைப்படுத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.

6. இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை MG/Outrate அடிப்படையில் விநியோகம் செய்யும் சூழ்நிலை வரும் நிலையில் படத்தினை திரையிட்டு பார்க்காமல் (Preview Show) வியாபாரம் செய்வது இல்லை என்று இரு தரப்பினரும் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.