சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கமல் தெரிவித்துள்ளார். #Sarkar #KamalHaasanஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் சர்கார். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இந்த காட்சிகளையும், ஜெயலலிதா தொடர்பான வசனங்களையும் நீக்கக் கோரி அ.தி.மு.க.வினர் சர்கார் வெளியாகியிருந்த பல திரையரங்குகளுக்குள் புகுந்து அந்தப் பட பேனர்களைக் கிழித்து ரகளையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து சர்கார் படக்குழு, குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை நீக்கி வெளியிட்டது.
இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். டைரக்டர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இனி அரசை விமர்சித்து தனது படத்தில் காட்சி வைக்க மாட்டேன் என உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
‘சர்கார், முறைப்படி தணிக்கைத் சான்றிதழ் பெற்று வெளியான ஒரு திரைப்படம். மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் அரசின் செயல்பாடு சரியல்ல.
இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பாசிசமானது ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட ஒன்று, தற்போது மீண்டும் தோற்கடிக்கப்படவுள்ளது”.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.