ஆவிகள் பற்றியும், அதைச்சார்ந்த உண்மை சம்பவங்கள் பற்றியும் ஆராய்ந்து கட்டுரை எழுதி வருகிறார் நாயகன் மிர்ச்சி ரமணா. இவர் மலேசியாவில் நடந்த அமானுஷ்ய சம்பவங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்காக மலேசியா செல்கிறார். அங்கு மூன்று நண்பர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டில் நடந்த அமானுஷ்ய சம்பவம் பற்றி ரமணா தெரிந்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
நண்பர்களான தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பொழுதுபோக்கிற்காக இரவில் ஆவிகளிடம் பேசும் முயற்சியில் மூன்று பேரும் ஈடுபடுகிறார்கள். அப்போது மல்லிகா என்ற ஆவி அவர்களிடம் பேச தொடங்குகிறது. தான் எப்படி இறந்தேன் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளும் மல்லிகா ஆவி, திடீரென்று மூவரில் ஒருவரை பயமுறுத்துகிறது.
இதனால், அந்த ஆவியிடம் பேசுவதை மூன்று பேரும் நிறுத்துவிட, திடீரென்று மூவரில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இந்த கதையை கேட்கும் ரமணா, மூன்று பேரில் ஒருவர் மட்டும் கொலை செய்யப்பட்ட காரணத்தை தேடி செல்கிறார்.
இறுதியில் மிர்ச்சி ரமணா, கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் மிர்ச்சி ரமணா, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை கேட்கும் போது, அதற்கு கொடுக்கும் ரியாக்ஷன் மற்றும் மல்லிகா ஆவி பற்றிய ரகசியத்தை தெரிந்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு அவரே பிரச்சனையில் சிக்கிக்கொள்வது என படம் முழுவதும் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மலேசிய நடிகர்களான தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூன்று பேரும் படத்தின் முதல் பாதி திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், சிறு சிறு மோதல்கள், ஆவியுடனான அனுபவம் என்று அனைத்துக்காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். மல்லிகா வேடத்தில் நடித்திருக்கும் ஹம்சினி பெருமாள், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அசல்இசம் பின் முகமது அலி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மற்றும் திகில் படத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசையில் மிரட்டியிருக்கும் இசையமைப்பாளர் டஸ்டின் ரிதுவன் ஷா.
வித்தியாசமான முயற்சியில் ஒரு திகில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே.கே.விக்கி. வரலாற்று சம்பவத்தை பின்னணியாக கொண்ட ஒரு திகில் கதையை தற்போதைய காலக்கட்டத்தோடு பயணிக்க வைத்து, ரசிக்க வைத்திருக்கிறார். பல திருப்பங்களோடு திரைக்கதையை நகர்த்தி இருப்பது படத்திற்கு பலம்