full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

‘நீட்’ தேர்வில் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னதால் சர்ச்சை: விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று முன்தினம் நடைபெற்றது. நீட் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தமட்டில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளிடம் கடும் கெடுபிடி காட்டப்பட்டது. முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கத்தரிக்கோலால் மாணவர்களின் சட்டையை வெட்டி, அரைக்கை சட்டையாக்கிய பின்னரே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் மாணவிகள் சிலர் தலை முடிக்கு கிளிப் மாட்டி வந்ததால், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் அந்த கிளிப்பை அகற்றினர். ஆனால் இவற்றையெல்லாம் விட கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரிடம் விதிமுறைகள் என்ற பெயரில் வரம்பு மீறல் சம்பவம் நடந்து உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியாரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 19-வயது மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுத வந்தார். அப்போது அங்கிருந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மெட்டல் டிடெக்டர் மூலம் அந்த மாணவியை சோதனை செய்தார். மெட்டல் டிடெக்டரை, மாணவியின் மேல் உள்ளாடைக்கு அருகே கொண்டு சென்ற போது அதில் ‘பீப்’ சத்தம் கேட்டது. இதனால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின் உள்ளாடையை அகற்றும்படி கூறினார். அதற்கு மாணவி, உள்ளாடையில் இரும்பு கொக்கி (பின்) இருப்பதால்தான் சத்தம் கேட்பதாக விளக்கம் அளித்து உள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த கண்காணிப்பாளர் உள்ளாடையை அகற்றினால்தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவி வேறுவழியின்றி தனது உள்ளாடையை கழற்றி அவரது தாயாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார்.

தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக முறையாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கண்ணூர் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி சிவா விக்ரம் தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்தால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி கேரள மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் கேரள சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மந்திரி ரவீந்திரநாத் உறுதி அளித்தார்.