‘ரிங் ரிங்’ திரைப்பட விமர்சனம்
ரிங் ரிங் இன்றைய சமுதாயத்திற்கு அவசியம் தேவையான ஒரு கதை ஒரு விளையாட்டு விபரீதத்தில் முடியும் என்பதை கருத்தாய் கொண்டு இந்த படம் வெளிவந்திருக்கிறது நட்பாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி குடும்பமாக இருந்தாலும் சரி அதில் விளையாட்டு வந்தால் விபரீதம் தான் என்பதை உணர்த்தும் கதை தமிழ் சினிமாவில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஒரு அற்புதமான கருத்துள்ள தமிழ் படமாக வந்திருக்கிறது அவசியம் இந்த படத்தை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும்.
விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியுள்ளார் சக்திவேல்.ஒளிப்பதிவு பிரசாந்த் டி எஃப் டெக், இசை வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் பிகே , கலை இயக்கம் தினேஷ் மோகன், பாடல்கள் பா. ஹரிஹரன்,தயாரிப்பு ஜெகன் நாராயணன்.
மனிதர்கள் விசித்திரமானவர்கள் .ஒவ்வொருவருக்குள்ளும் ரகசியங்கள் உண்டு. ஒவ்வொருவர் மனதின் ரகசியமான உள்ளறைகளில் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.காணப்படுகிற மனம் வேறு, அறியப்படுகிற மனம் வேறு என்பது உள்ளே நுழைந்து பார்த்தால் தான் தெரியும்.
இந்த வேறுபாடு பெற்றோர் பிள்ளைகள், கணவன் மனைவி ஆகியோரிடமும் உண்டு.ஒருவரைப் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல.இந்தக் கருவை மையமாக்கி ‘ரிங் ரிங்’ திரைப்படத்தின் கதை உருவாகியுள்ளது.
நண்பர்கள் நால்வர், அவர்களுக்கு தலா ஒரு இணை.விவேக் பிரசன்னா -ஸ்வயம் சித்தா,டேனியல் அன்னி போப் – ஜமுனா , பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால், அர்ஜுனன் – சஹானா என, நான்கு இணைகள் கதாபாத்திரங்களாக வருகின்றனர்.
குறிப்பாக விவேக் பிரசன்னா – ஸ்வயம் ஜோடி நிறைய நடிப்பு தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.இயல்பான நடிப்பால் அந்த இணை முதலிடம் பெறுகிறது.சில இடங்களில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.
இன்னொரு பெண்ணுடனான தொடர்பு தெரிந்து காதலியிடம் மாட்டிக் கொள்ளும் போது போதையில் செஞ்சிட்டேன் என்று விழி பிதுங்கி சமாளித்து உளறும் டேனியல் நடிப்பும் கலகல ரகம்.பிரவீன் ராஜா – சாக்ஷி அகர்வாலுக்குள் நடக்கும் உரையாடலும், அவர்களுக்குள் விழும் சந்தேக முடிச்சு அவிழ்வதும் நல்லதொரு உணர்வு வெளிப்பாடுகள்.அர்ஜுனன் – சஹானா இருவருக்குள் நிலவும் புரிதலின்மையின் வெளிப்பாடுகளை நன்றாகவே நடிப்பில் காட்டியுள்ளனர்.குறிப்பாக அர்ஜுனன் அதிகம் பேசாமலே விழிகளாலே உணர்வுகளைக் கடத்தி உள்ளார்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வழியே வெளிப்பட்டுள்ளன.திரைக்கதையின் சுவாரஸ்யத்தால் பெரிதாக வெளிப்புறக் காட்சிகளுக்கு அவசியம் இல்லையென்று இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் அதுவே ஒரு கட்டத்தில் தொலைக்காட்சித் தொடர்களின் உரையாடல் போல ஒரு தோற்றத்தைத் தருகிறது.
படத்திற்கு ஏற்ற துல்லியமான வண்ணமயமான ஒளிப்பதிவு செய்துள்ளார்
ஒளிப்பதிவாளர் பிரசாத்.
உள்ளரங்கில் நடக்கும் காட்சிகளை அழகாக எடுத்துள்ளவர், கதாபாத்திரங்களின் உணர்வுகளை நம்மிடையே நெருக்கமாகக் கொண்டு வருகிறார். .
கதைக்குப் பொருத்தமான பின்னணி இசை வழங்கி காட்சிகளுக்கு அழுத்தம் சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் வசந்த் இசைப்பேட்டை. ‘அழகான நேரங்கள் ‘பாடல் மீண்டும் கேட்கும் ரகம்.
கதையில் வில்லன்கள் என்று எதுவுமே இல்லை சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் திரைக்கதையின் விறுவிறுப்புக்குக் காரணமாக இருக்கும் படி அமைத்துள்ளார்கள். ஒவ்வொருவரின் ரகசியங்கள் வெளியே வரும்போதும் திரைக்கதையில் கலகலப்பும் பரபரப்பும் தோரணம் கட்டி நிற்கின்றன .
மாறி வரும் அவசர யுகத்தில் செல்போனின் தாக்கத்தை, அதன் விளைவில் நிகழும் கலாச்சார அதிர்வுகளை ஓர் இழையாக்கி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சக்திவேல்.எந்த முன் முடிவும் இல்லாமல் படம் பார்க்க அமர்வோருக்கு இந்தப் படம் ஏமாற்றாது.