அவதூறு கருத்துகளை பதிவிட்டவர்களுக்கு…பதிலடி கொடுத்த ரித்திகா சிங்

General News

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் அவர் நடிக்கிறார்.

இதனிடையே நடிகை ரித்திகா சிங், மேக்கப் இன்றி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவருக்கு முகப்பரு இருப்பதை பார்த்து சிலர் எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ரித்திகா சிங் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “என் முகத்தில் இருக்கும் பருக்கள் பற்றி யாராவது ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும். எங்களுக்கு பருக்கள் இருப்பது எங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா? எங்கள் முகத்தில் உள்ள கறைகளை எங்களால் பார்க்க முடியாது என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக, எங்களுக்கு தெரியும்.

ஆனால் நாங்கள் அவற்றைப் புறக்கணித்துவிட்டு, சமூக வலைதளங்களில் உண்மையான நபர்களாக இருக்க பார்க்கிறோம். அது கைதட்டலுக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன். உண்மையிலேயே சில கருத்துக்கள் என்னை மிகவும் புண்படுத்தின. சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுவதை நிறுத்துங்கள்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.