full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :
Latest Update

உடைந்த திரையுலகம்.. உடைத்த கந்துவட்டியும், ஆர்.கே.நகரும்!

திரையுலகில் பொதுவாகவே போட்டி என்பது நேரடியாகவும், பொறாமை என்பது மறைமுகமாகவும் இருக்கக் கூடியது தான். பெரும்பான்மையான நேரங்களில் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் ஒருவருக்கொருவர் இருந்தாலும், திரையுலகின் நலனைக் கருத்தில் கொண்டு எல்லோரும் ஓரணியிலேயே நின்றிருக்கிறார்கள்.

உள்ளுக்குள்ளேயே அரசியல் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பெரிய நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை எதையும் வெளிப்படையாக பேசாமலே கடந்து போவார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிக் கிடக்கிறது. சரத்குமாரை வீழ்த்தி நடிகர் சங்கத்தை என்று விஷால் கைப்பற்றினாரோ அன்றிலிருந்து “புகைச்சல்” ஓய்ந்த பாடில்லை. போதாத குறைக்கு தயாரிப்பாளர் சங்கத்தையும் விஷால் கூட்டணி பிடிக்க புகைச்சல் கொஞ்சம் கொஞ்சமாய் நெருப்பாக பற்றி எரிய ஆரம்பித்தது.

“விஷால் துடிப்பாக செயல்படுவது போல் கண்பிக்க அடிக்கடி எதாவது அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதாகக் காட்டிக் கொண்டாலும், இதுவரை எந்த பலனும் கிடைத்த பாடில்லை” என்று திரைத்துரையின் பெரும்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர் . திரையில் பேசும் வசனங்களையே மேடையிலும் பேசுகிற விஷால் மற்றும் அவரது கூட்டணியால் இதுவரை எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தவே முடியவில்லை என்பது, கசப்பாகவே இருந்தாலும் உண்மையாக இருக்குமோ? என்று பலரும் இப்போது யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

உண்மை இப்படியானதாக இருக்க, இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறவினருமாகிய அஷோக் குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவத்திலிருந்து வெளிப்படையாகவே தமிழ்த் திரையுலகம் இரண்டாக உடைந்தது. கந்துவட்டி மதுரை அன்புவிற்கு எதிராக விஷால் கூட்டணியினர் முஷ்டியை முறுக்க, அன்புவிற்கு ஆதரவாக ஒரு தரப்பு நற்சான்றிதழ் வழங்க பிளவு தெளிவாக தெரிய ஆரம்பித்தது.

அந்த பிரச்சனையின் ஈரம் காய்வதற்குள்ளாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக விஷால் அறிவிக்க உடைப்பு இப்போது பெரிதாகிக் கிடக்கிறது. நடிகர் சங்கப் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ வேட்பாளர் என தட தடவென நகரும் விஷாலைக் கண்டு திரையுலகின் ஒரு பகுதியினர் பொறுமித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அதன் வெளிப்பாடு தான் “தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் நிற்கட்டும். அப்படி செய்யாவிட்டால் தயாரிப்பாளர் சஙத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டம் செய்வேன். அனைத்து தயாரிப்பாளர்களும் ஒன்று சேருங்கள்” என்று இயக்குநர் சேரன் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

இது இப்படி இருக்க இயக்குநர் சுசீந்திரனோ, “விஷாலுக்கு ஆதரவாக நானே களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பேன். மாற்றத்தை விரும்பும் என் தம்பிகள் நிச்சயம் என்னைப் போலவே தான் எண்ணுவார்கள்” என்று பிரச்சாரத்திற்கே தயாராகிவிட்டார்.

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது பெரும்பாலான மக்களின் எண்ணவோட்டமாக இருப்பதற்குக் காரணம், பொதுவாகவே சினிமாக் காரர்களுக்கு மக்கள் பிரச்சனைகளின் மீதான பார்வை முற்றிலும் மேம்போக்குத் தனமாக இருக்கும் என்பது தான். விஷால் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு கூட அதே போன்றதாகத் தான் இருக்கிறது. பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எந்த விதமான் நடவடிக்கையும் எடுக்காமல், அந்த பிரச்சனைகளின் மூலம் தன்னை விளம்பரப்படுத்துவதில் தான் அவர் குறியாக இருப்பதாக சக படைப்பாளிகளே விமர்சிக்கும் அளவிற்குத் தான் விஷாலின் கடந்த கால நடவடிக்கைகள் இருந்திருக்கிறது.

எது எப்படியோ ரஜினியின் 21 வருட அரசியல் வருகை வாக்குறுதிகளைப் போல இல்லாமல், கமலின் டுவிட்டர் அரசியல் பொல இல்லாமல் களத்திற்கு நேரடியாக வந்த துணிச்சலை பலரும் பாராட்டத் தான் செய்கிறார்கள். ஆனால் முடிந்தவரை உடைந்து கிடக்கிற தமிழ்த் திரையுலகினரை ஒன்றினைக்க வேண்டியது தான் மக்கள் பணியாற்ற புறப்படும் முன்னர் விஷால் செய்யவேண்டிய முக்கியமான பணி. தன் கைவசம் இருக்கும் இரண்டு முக்கிய பொறுப்புகளை வைத்துக் கொண்டு திரையுலகில் நிலவும் அரசியலையே சரியாகக் கையாளாதவர், எப்படி மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பார்? என திரையுலகின் ஒரு பகுதியினர் பொறுமிக் கொண்டிருக்கின்றனர்.