முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் உள்ளிட்ட 145 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார். மேலும் நடிகர் விஷால், ஜெ.தீபா உள்பட 73 பேரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
நடிகர் விஷால் வேட்பு மனு விவகாரத்தில் எப்படி பரிசீலனை நடந்தது என்ற விளக்கத்தையும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டார். இதனால் நடிகர் விஷால் கடும் அதிர்ச்சி அடைந்தார். விஷாலுக்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்தன. இதனால் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 145 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனையின் போது 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை நேரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று 14 சுயேட்சைகள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியலில் 58 பேர் இடம் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் நடிகர் விஷாலுக்கு ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பது உறுதியானது.