full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆர்.கே.நகர், பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் அங்கீகாரத்தைக் கொடுக்கும்!!

இசைக்கலைஞர்கள் சூழ்ந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று சொன்னாலே நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு இசைக் குறிப்பிற்கும் மிகப்பெரிய சவால் காத்திருக்கும். குறிப்பாக, மேஸ்ட்ரோ இளையராஜா, கங்கை அமரன், யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு போன்ற மந்திர சாதனையாளர்கள் மத்தியில் பிறக்கும் போது அது இன்னும் சவாலானது. அவர்களின் தாக்கத்தில் இருந்து வெளியே வரவும், தனித்துவமான இசையை கொடுப்பதற்கும் மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, பிரேம்ஜி அமரன் அவர்களின் தாக்கத்தில் இருந்து வெளிவந்து இசையை வழங்குவதற்கு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அவரது திறமை ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தில் “பப்பர மிட்டாய்” என்ற ஒரு சென்சேஷனல் பாடலை கொடுத்திருக்கிறார்.

ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூடியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ்டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. மக்களை உடனடியாக முணுமுணுக்க,பாட வைப்பதிலும், விழாக்களில் ஒலிபரப்புவதிலும் இருக்கிறது. இந்த பாடல் கல்லூரி மாணவர்களிடமும், டீனேஜர்களிடமும் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. ரயில் பயணங்களில் குழுவாக இணைந்து பாடி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஆம்,அது சம்பிரதாயமான கானா பாடல், அந்த ட்ரெண்ட் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. “காஞ்சனா” லோகன் எளிமையான பாடல் வரிகளும், “கானா” குணா அதை பாடிய விதமும் நிச்சயமாக அதை ஒரு வெற்றி பாடலாக்கி இருக்கிறது.

திறமையான இயக்குனரான சரவண ராஜன் (வடகறி புகழ்) இயக்கத்தில் வைபவ், சனா அல்தாஃப் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அஞ்சனா கீர்த்தி, சந்தனா பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா மற்றும் சில முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

“பிரேம்ஜி இசைத்திறமை மிகுந்த ஒரு கலைஞர். மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு இசையமைப்பாளராகவே நான் அவரை உணர்கிறேன். இன்றைய ட்ரெண்டில் இருப்பது அவரின் பலம். அவருடைய வெளித்தோற்றத்துக்கு மாறாக, பிரேம்ஜி மிகவும் தீவிரமான இசையமைப்பாளர். பின்னணி இசை கோர்ப்பில் பிரேம்ஜி மிகச்சிறந்தவர். அவருக்கு ஒரு இசையமைப்பாளராக கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை “ஆர்.கே நகர்” நிச்சயம் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்” என்றார் இயக்குனர் சரவண ராஜன்.

பிரேம்ஜி அமரன் தவிர்த்து, ஒளிப்பதிவாளராக எஸ்.வெங்கடேஷ் மற்றும் படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். “ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட்” பத்ரி கஸ்தூரிடன் இணைந்து,“ பிளாக் டிக்கெட் கம்பெனி” சார்பில் வி. ராஜலட்சுமி படத்தை தயாரிக்கிறார்.