கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, ‘சொல்ல முடியாத துயரில் உள்ள டெல்டா மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன். என்னால் முடிந்த அளவில், ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி, நானும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன்.1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன வாட்டர் ஃபில்டர் மற்றும் போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள் சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம்.
உணவு பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை பூதாகரமாக தலையெடுத்துள்ளது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல, சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிக பெரிய தேவையாக இருக்க போகிறது. இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை அனுப்புகிறோம்.
இந்த சுத்திகரிப்பு கருவிகள் (syphon filter) பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாக பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க அவசியமில்லை.
பிளாஸ்டிக் பாட்டில்களையும் கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக்கொள்ளலாம் (Recyclable and biodegradeable). வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது, இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் ஃபில்டர்களை உடனடியாக தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா வாட்டர் ஃபில்டர் நிறுவனத்திற்கு நன்றி’ என்றார்..
மேலும் ரஜினி அனுப்பிய பொருட்களை கூட நமது தம்பிகள் தான் நிர்வகிக்கிறார்கள். அரசாங்கத்தின் செயல்பாடு உண்மையைச் சொல்லணும்னா முன்னாடி இருந்த பேரிடர்களை விட இந்த முறை அரசின் அணுகுமுறை நல்லா இருக்கு. முதல்வர் ஹெலிகாப்டர்ல பார்த்தார்னா, அவர் ஒரே நேரத்துல எல்லாரையும் பார்க்கணும்னு நினைச்சி இருக்கலாம். இருந்தாலும் அவர் தரை மார்க்கமா வந்து பார்த்தா நல்லா தான் இருக்கும். அங்கு ராணுவ உதவி அவசியத் தேவை. மத்திய அரசு இன்னும் வேகமா செயல்படணும். நமக்குத் தெரியாத ஆள்கள் மூலமா உதவிகள் போய்ச்சேருவதை விட தெரிந்தவர்கள் மூலமா போய்ச் சேர்வது நல்லது’ என்றார்.