2017 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, அதற்கு முந்தைய நாள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றியபோது, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அப்போது அவர், “நாட்டில் உள்ள 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி கர்ப்பிணி பெண்களின் ஆஸ்பத்திரி செலவு, தடுப்பூசி, ஊட்டச்சத்துணவு ஆகியவற்றுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணம் கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இந்த நிதி உதவி திட்டமானது, பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள் உயிர் இழக்கும் அவலத்தை பெரிதும் குறைத்துவிடும்.” என குறிப்பிட்டார்.
சோதனை ரீதியில் 53 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. அந்த மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 2 குழந்தைகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய எரிசக்தித்துறை மந்திரி பியுஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
இந்த திட்டத்தின்கீழ் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் குழந்தைக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும். இதில் ரூ.5 ஆயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் தரப்படும்.
ரொக்கமாக வழங்கப்படுகிற இந்த தொகை, கர்ப்பிணி பெண்கள் வேலைக்கு செல்லாததால் ஏற்பட்ட கூலி இழப்பை சரிக்கட்டுவதாகவும் அமையும். எனவே பிரசவத்துக்கு முன்னரும், பின்னரும் அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க முடியும். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படவும் மாட்டார்கள்.
இது பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி நாட்டு மக்களுக்கு அறிவித்த திட்டம் ஆகும்.” என்று கூறினார்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* இந்த மகப்பேறு உதவி திட்டம் 2017-ம் ஆண்டு, கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. அந்த நாள் முதல், 2020-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த திட்ட செலவினம் ரூ.12 ஆயிரத்து 661 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7 ஆயிரத்து 932 கோடி.
* முதல் குழந்தைக்கு மட்டும்தான் செயல்படுத்தப்படும்.
* இந்த திட்டத்தின் பலனை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் தவிர்த்து அனைத்து பெண்களும் பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள்.
* கர்ப்பத்தை பதிவு செய்தவுடன் ரூ.1,000, 6 மாதங்களுக்கு பிறகு முதல் கர்ப்ப கால பரிசோதனை செய்த பின்னர் ரூ.2 ஆயிரம், குழந்தை பிறந்த பின்னர் தடுப்பூசிகள் போடுகிற காலகட்டத்தில் ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரத்தை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், கர்ப்பிணிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி விடும். விதிமுறைகளின்படி பயனாளிகள் மீதித்தொகையையும் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் சராசரியாக ஒவ்வொரு கர்ப்பிணியும் ரூ.6 ஆயிரம் பெறுவர்.