சாய் பல்லவியைச் சுற்றி புகையும் நெருப்பு!!

News

ஆர்ப்பாட்டமே இல்லாமல் அறிமுகமாகி, அதகளமான வரவேற்பைப் பெற்றவர் “மலர்”. சாரி, சாரி.. சாய் பல்லவி. ஒரே படத்தில் ஒரு நடிகையை ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் எளிதில் கிடைக்கிற காரியமில்லை. “பிரேமம்” மலையாள படமாகவே இருந்தாலும், இரண்டு மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், தமிழ் தெலுங்கு மலையாளம் என வேகமாக பிரபலமானது என்னவோ சாய் பல்லவி தான்.

யார் கண் பட்டதோ, “சாய் பல்லவியை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. படப்பிடிப்பில் அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை.
முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். சிறுசிறு விஷயங்களுக்கு கோபப்பட்டார். தெலுங்கில் சாய் பல்லவி நடித்த பிடா படம் வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்கு சாய் பல்லவி காரணம் இல்லை” என்று நடிகர் ஆக சவுரியா அடுக்கடுக்காக புகார் கடிதம் வாசித்தார்.

அதற்கு முன் நானியுடன் சாய் பல்லவி நடித்த மிடில் கிளாஸ் அப்பாயி படப்பிடிப்பிலும்
இதுபோல பிரச்சினை ஏற்பட்டது. படப்பிடிப்பில் நானியும் சாய் பல்லவியும் தகராறில் ஈடுபட்டு இருவருமே படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார்கள்.

இப்போது தமிழில் “கரு”, சூர்யாவுடன் “என்.ஜி.கே”, தனுசுடன் “மாரி2” என வரிசையாக நடித்து வரும் இந்நேரத்தில் தமிழிலும் சாய் பல்லவி மீது புகார்கள் வரத்தொடங்கியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின், சாந்தனுவை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக மூன்று கோடி சம்பளம் கேட்டதாகவும், சாந்தனுவுடன் நடிக்க விருப்பம் இல்லாததனாலேயே அப்படி சம்பளத்தை வேண்டுமென்றே கேட்டதாகவும் செய்திகளை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், ராஜேஷ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி நடிப்பதாக இருந்து இப்போது நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கும் சாய் பல்லவியின் மோசமான அணுகுமுறையே காரணம் எனவும் கொளுத்திப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

வளர்ற புள்ளைய வளர விடுங்கப்பா.. சும்மா எதையாவது கிளப்பிவிட்டு காலி பண்றதே வேலையா போச்சு!!