அரசியல்வாதிகளை வறுத்தெடுத்த எஸ்.ஏ.சி!

News
0
(0)

“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது.

“வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார்.

விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு நடிகராக தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரும் கலந்துகொண்டார்.

பாஜக நபரை மேடையில் வைத்துக் கொண்டே, பத்மாவதி பிரச்சனையோடு பேச ஆரம்பித்தார் நடிகர் ஆரி. “கருத்து சுதந்திரம் குறித்து எல்லோரும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இப்போது சினிமாக்காரர்கள் மட்டுமல்ல நாடு முழுவதுமே கருத்து சுதந்திரம் குறித்த கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சியின் பொறுப்பாளர் நம்மோடு இங்கே மேடையில் இருக்கிறார். அவரிடம் சொன்னால் நமது பிரதமர் மோடியிடமே சொன்னது போலாகும். அதனால், தயவு செய்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் என்று இந்த மேடையின் வாயிலாக ஒரு தமிழனாக வேண்டுகோள் வைக்கிறேன்” என்று திரியைப் பற்ற வைத்தார்.

அடுத்து பேசிய பி.டி.அரசகுமார், “மோடி அரசும், தமிழக பாஜகவும் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பதாக சொன்னதற்கு முதலில் பதில் சொல்லி விடுகிறேன். தம்பி விஜய் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அவருக்குத் தமிழகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு விசயத்தைப் பேசுகிறார் என்றால் அது வெகு சீக்கிரமாக மக்களை சென்றடைகிறது. இப்படி இருக்கும் சூழலில் தம்பி விஜயால் ஒரு தவறான கருத்து வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதால் தான் நாங்கள் எதிர்த்தோம்” என்று பேசினார்.

ஆரி பற்ற வைத்த சிறு நெருப்பை, பெரு நெருப்பாக மாற்றினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். “நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் எனது நேரம் தவறாமையே காரணம். நேரத்தைக் கடத்தாமல் ஒவ்வொரு நொடியையும் பொன்போல மதித்து நடந்தாலே வெற்றி பெறலாம். அண்ணன் பி.டி.அரசகுமார் பேசும்போது, ஒரு நடிகர் ஒரு தவறான கருத்தை பேசும்போது அது எளிதில் மக்களை சென்றடைவதாக சொன்னார். இதற்கு நான் பல பேட்டிகளில் பதில் சொல்லிவிட்டேன், இருந்தாலும் இந்த மேடையிலும் சொல்கிறேன். சினிமா வேறு, அரசியல் வேறு, வாழ்க்கை வேறு. சினிமாவில் கொடூரமான வில்லன்களாக நடிப்பவர்கள் நேரில் குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் நம்மோடு குழைந்து பேசுபவர்களும் சில நேரங்களில் நம் கழுத்தறுத்து விடுவார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞரை கைது செய்த போது, கண்டித்து ஒரு பக்க அளவிற்கு பத்திரிக்கையில் கண்டனம் செய்தவன் நான். நான் எந்த கட்சியையும் சாராதவனாக இருந்தாலும், கலைஞரை எனக்கு பிடிக்கும் என்கிற காரணம் தான் அது. ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் அவரது கம்பெனியில் படம் இயக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அப்படித்தான் அப்போதைய அரசியல்வாதிகள் இருந்தார்கள். அவர்கள் அரசியலையும் சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்தறிகிற ஆற்றலும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கெல்லாம் அந்த பக்குவமும், நம்பிக்கையும் இல்லை. எங்கே ஏதாவது ஒரு நடிகன் நாடாள வந்துவிடுவானோ? என்ற பயத்திலேயே இருக்கிறார்கள். அதனால் தான் இவர்களால் சினிமாவையும், அரசியலையும் வேறு வேறாக பிரித்தறிய முடியவில்லை. “விசிறி” படம் “அஜித்-விஜய்” ரசிகர்கள் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இந்த பிரச்சனை இப்போது மட்டும் இல்லை, எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய ஒன்று. ரசிகர்களே சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகிறார்கள், ரசிகர்கள் இல்லாவிட்டால் இங்கு சூப்பர் ஸ்டார்கள் இல்லை. இந்த சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டாலும், நடிகர்கள் நண்பர்களாக ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். அதனை உணர்ந்து இரு தரப்பு ராசிகர்களும் ஒன்றிணைந்தால் புது சரித்திரத்தையே இங்கு உருவாக்க முடியும். அதேபோல எல்லா நடிகர்களுடைய ரசிகர்களும் ஒன்றிணைந்தால் தவறு செய்கிற அரசியல்வாதிகள் எல்லாம் தலைதெறிக்க ஓடி விடுவார்கள். ஊழல்வாதிகள் எல்லாம் ஒழிந்து போவார்கள். அந்த இளைஞர்களால் மட்டுமே நம்முடைய வரிப்பணத்தை எல்லாம் தங்கள் பைகளில் போட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகளை பஞ்சு பஞ்சாக விரட்டியடிக்க முடியும். அந்த காலம் வந்துவிட்டது, மெரினாவில் கூடிய இளைஞர் பட்டாளமே அதற்கு சான்று.

இளைஞர்கள் வந்துவிட்டார்கள், இனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவும். நான் பாஜகவையும் சேர்த்து தான் சொல்கிறேன். தமிழர்கள் நாங்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற கோட்பாட்டில் வாழ்பவர்கள். இங்கு தேவையில்லாமல் ஜாதியையும், மதத்தையும் ஏன் திணிக்கிறீர்கள்? நாடாள்கிற ஒரு கட்சியின் முக்கியமான பதவியிலிருக்கும் ஒருவர் பொறுப்பில்லாமல் ஜாதி, மத அடிப்படையிலான கருத்துக்களை சொல்வது எவ்வளவு மோசமான செயல்?

இங்கிருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்யக் கிளம்பிவிடுகிறார்கள். படத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த வசனம் இடம்பெறுகிறது என்பதைக் குறித்து எந்த கவலையும் இல்லை. தயவுசெய்து மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ் சினிமாவை வாழவிடுங்கள்” என்று பேசினார்.

பாஜக பிரமுகரை வைத்துக் கொண்டே எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படியெல்லாம் பேச, அரங்கமே அதிர்ந்தது.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.