தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா இவர்களுடன் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நடிகர் பிரபு பேசுகையில்,‘ அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற தேடல் இருப்பதை கவனித்திருக்கிறேன். உடலை ஏற்றுவார். இறக்குவார். குரலை மாற்றுவார். அதே போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அந்த பாதையில் என்னுடைய அருமைத்தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ராவணா, கந்தசாமி அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் போது நான் உணர்ந்த ஒரு விசயம் என்னவெனில், அவர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.’ என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்,‘ இந்த படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நான் நடித்திருக்கிறேன். சாமி படத்தில் அவரின் நடிப்பில் ஏற்படுத்திய பிரமிப்பு என்னால் ஏற்படுத்த முடியுமா? என்றால் முடியாது. ஆனால் என்னுடைய ஸ்டைலில் முயற்சித்திருக்கிறேன். முதலில் நான் இதனை ஏற்க தயங்கினேன். ஆனால் இயக்குநர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதனால் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் நடித்திருக்கும் கீர்த்திசுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம் ’ படத்தைப் பார்த்து வியந்து அவரின் ரசிகையாகிவிட்டேன். இந்த படத்தில் நடைபெற்ற பல சுவராசியமான சம்பவங்களை படத்தின் வெற்றிவிழாவில் பகிர்ந்துகொள்கிறேன்.’ என்றார்.
படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பேசுகையில்,‘ இயக்குநர் ஹரியுடன் பணியாற்றும் போது நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாக தெரிந்துகொள்ளலாம். படபிடிப்பு தளத்தில் பரபரப்பாக இயங்குவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இந்த படத்தில் சூரி, இமான் அண்ணாச்சி, சுமித்ரா, விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தான் எனக்கு ரசிகையாகியிருக்கிறார். ஆனால் நான் அவர் நடித்த காக்காமுட்டை பார்த்துவிட்டு அவருக்கு நான் ரசிகையாகியிருக்கிறேன். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியதற்கு காரணம் தயாரிப்பாளர் ஷிபு அண்ணன் தான். அவர் தான் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறேன். என்னுடைய சிறிய வயதில் அன்னியன் படத்தின் போஸ்டரை என்னுடைய அறையில் ஒட்டிவைத்திருந்தேன். அந்த படத்தில் வரும் ரெமோவை ரசித்தேன். தற்போது அந்த ரெமோவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். சாமி படத்தின் முதல் பாகத்தில் விக்ரம் எப்படியிருந்தாரோ அதே போல் இந்த படத்திலும் இருக்கிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமிது. தமிழில் முதல் படம்.’ என்றார்.
நடிகர் விக்ரம் பேசுகையில்,‘ சாமி என்னை கமர்சியல் ஹீரோவாக நிலைநிறுத்திய படம். தில், தூள் வரிசையில் அமைந்த மற்றொரு மாஸான படம்.
இயக்குநர் ஹரியைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர் ஒரு படத்தை இயக்குவதை தவம் போல் ஒய்வேயில்லாமல் அர்ப்பணிப்புடன் செய்வார்.
கந்தசாமி படத்தில் எல்லா பாடல்களையும் பாட வைத்ததற்கு இயக்குநர் சுசிக்கும், தேவி ஸ்ரீபிரசாத்திற்கும் நன்றி சொல்லவேண்டும். அந்த படத்தில் அந்த ஒரு விசயத்தை நான் புதிதாக செய்திருக்கிறேன். அதே சமயத்தில் மற்ற இசையமைப்பாளர்களை விட தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் பாடும் போது, பாடல்வரிகளுக்குள் இருக்கும் எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடச்சொல்வார். இந்த வரிக்கு காமெடியாக முயற்சிக்கலாமா…? இந்த எமோஷனில் பாடலாமா..? என சொல்வார். இந்த படத்தில் நான் பாடிய பாடலில் கூட ஒரு இடத்தில் ‘ஏக்க்க்க்..’ என ஒரு இடத்தில் வரும். அதில் ஒரு எமோஷனை முயற்சித்திருப்போம். இது அவரின் ஸ்பெஷல். ஆனால் எனக்கு மெலோடி பாடல் பாட ஆசை. அடுத்த முறையாவது எனக்கு மெலோடி பாட்டை பாட வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் உடலை ஏற்றி இறக்கி நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்.
ஒரு சிக்கலான சூழலில் ‘இருமுகன் ’ படத்திற்கு கைகொடுத்து ஒத்துழைப்புக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஷிபு. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது சந்தோஷம்.’ என்றார்.