முதலில் “சக்கப்போடு போடு ராஜா” படத்தை “வேலைக்காரன்” படத்தோடு ரிலீஸ் செய்த தைரியத்திற்காக சந்தானத்திற்கு பாராட்டுகள்.
காமெடி டூ ஹீரோ சேஞ்ச் ஒவரில் சந்தானத்திற்கு ஐந்தாவது படம். ஆனாலும் நம் கண்கள் அந்த பழைய சந்தானத்தையே தேடுகிறது. எவ்வளவோ முயற்சி செய்தும் சந்தானம் ஹீரோவாக மனதிற்குள் இறங்க மறுக்கிறார். அவரும் தன்னை ஹீரோவாகக் காட்ட பறந்து பறந்து சண்டை போடுகிறார், உருண்டு பொறண்டு நடனம் ஆடுகிறார், பஞ்ச் வசனமெல்லாம் பேசி ஸ்லோவ் மோஷனில் நடந்து போகிறார். ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டே இருக்கிறது.
எஸ் பாஸ், அந்த உடல்மொழி! அது தான் உறுத்தலாகவே இருக்கிறது. அதை உடைக்க சந்தானமும் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஹீரோவாக அவரது வளர்ச்சிக்கு இந்தப் படம் நிச்சயமாக உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
நண்பனின் காதலுக்கு உதவி செய்யப் போய் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் 10,156 வது தமிழ் சினிமா ஹீரோவாக சந்தானம். தங்கச்சி மேல் உயிரையே வைத்திருக்கிற தமிழ் சினிமாவின் 20,550 வது வில்லன் அண்ணனாக சம்பத்.. இவர்களுக்குள் இருக்கிற முட்டல் தான் படம் என்கிற அதரப் பழசான கதை. அந்தப் பழைய கதையில் காமெடியை திகட்ட்டத் திகட்டப் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.
விவேக் ரொம்ப நாளைக்குப் பிறகு கதிகலங்க சிரிக்க வைத்திருக்கிறார். அவருக்கும், விடிவி கணேசிற்கும் இடையே நடக்கிற கலாட்டாக்களால் தியேட்டர் குலுங்குகிறது. பற்றாக் குறைக்கு ரோபோ சங்கர் ஒரு பக்கம் தட்டித் தூக்குகிறார். எனவே சிரிப்பிற்குப் பஞ்சமில்லாமல் நகர்கிறது படம்.
கதாநாயகி வைபவி, கவர்ச்சிப் பதுமையாக வந்து, போகிறார். பாடல்களில் ம்ம்ம்… மற்றபடி நடிக்க வைத்தெல்லாம் அவரை துன்புறுத்தாமல் விட்டிருக்கிறார்கள்.
சிம்புவின் முதல் படம் இசையமைப்பாளராக. “காதல் தேவதை” பாடல் சூப்பராக இருக்கிறது. மற்றபடி பின்னணி இசை காது கிழிகிறது.
ரோபோ சங்கரை கலாய்ப்பது, விவேக்குடன் பேசும் காட்சிகள், சம்பத்துடனான காட்சிகள் என படம் முழுதையும் ஆக்கிரமித்து நிற்பவர் சந்தானம் தான். படத்தின் அத்தனை சொதப்பல்களையும் தனி ஒருவனாக சமாளித்து கரையேற்றியிருக்கிறார். அந்த மாஸ் காட்சிகளுக்கான பாடி லாங்குவேஜ் மட்டும் கைகூடிவிட்டால், சந்தானம் சக்கப்போடு போடுவார்.
குடும்பத்தினரின் சம்மதத்தோடு காதலியைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சேதுராமன். கொஞ்சம் பழைய கதை என்றாலும், அதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார். விவேக், சம்பத் காட்சிகளில் பழைய டெக்னிக் பயன்படுத்தப்பட்டிருப்பது. லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத காட்சிகள், முந்தைய தமிழ்ப் படங்களின் சாயல்கள் என அனைத்தும் படத்திற்கு தோய்வை ஏற்படுத்தி இருக்கிறது. இவற்றை தவிர்த்து படத்தை ரசிக்கலாம்.