full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

சாக்‌ஷி அகர்வால் தொடங்கி வைத்த கண்காட்சி

சென்னையில் கலாஷேத்ரா பவுன்டேசன் பிரதான நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பிரபல நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இதனைத் தொடங்கி வைத்த நடிகை சாக்‌ஷி அகர்வால் பேசும் போது, “இந்த கண்காட்சியில் இந்தியாவிலிருந்து பத்தொன்பது மாநிலங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கிறது. பாரம்பரியம் மாறாமல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலம்காரி புடவைகள், ஆர்கானிக் மற்றும் இயற்கையான வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், வீட்டின் உள் அலங்காரத்திற்கான பொருட்கள், வரவேற்பறையில் வைக்கக்கூடிய கண்கவர் கலைப்பொருட்கள் என அனைத்து வகையான பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு வித்தியாசமான கண்காட்சியாக நிச்சயமாக இருக்கும்.” என்றார்.

இந்த கண்காட்சியில் டோக்ரா பழங்குடியின மக்களின் கைவண்ணத்தில் உருவான அணிகலன்கள் காண்போரைக் கவரும். ஆக்ராவிலிருந்து மார்பிள் கற்களில் குடையப்பட்ட கைவினைப் பொருட்களும், ஒடிசா மாநிலத்தில் வாழும் சௌரா என்ற பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரியமான இயற்கை வண்ணத்தைக் கொண்டு வரைந்த துணி ஓவியங்களும் பார்வையாளர்களை ஆச்சரியப்படவைக்கும். இந்திய பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான கோடீஸ்வர் என்ற கிராமப்பகுதியிலிருந்து வந்திருக்கும் கிராமிய கலைஞர்களின் கைவினைப் பொருட்களும், செட்டிநாட்டு கைவினைப் பொருட்களும் இந்த கண்காட்சியை அலங்கரிக்கின்றன.

பிற மாநில கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான வித்தியாசமான கலைப்பொருட்களின் சங்கமமாக இருக்கும் இந்த மான்யா ஹஸ்தகலா கைவினைப் பொருட்களின் கண்காட்சி சென்னையில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது என்பதும், இந்த கண்காட்சி இன்றிலிருந்து பத்து நாட்கள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.