சலார் – திரை விமர்சனம்

cinema news movie review

பிரபாஸை காப்பாற்றியதா சலார் – திரை விமர்சனம்!

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சலார். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் கதை என்னவென்றால்.. தனது அம்மாவின் அஸ்தியை கரைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். அவரை கடத்திச் செல்ல ஒரு கும்பல் துரத்துகிறது. வெளி நாட்டில் இருந்து இந்தியாவில் இருக்கும் மைம் கோபியின் உதவியை நாடுகிறார் ஸ்ருதி ஹாசனின் அப்பா. ஸ்ருதி ஹாசனை பிரபாஸிடம் சென்று பத்திரமாக இருக்க வைக்கிறார் மைம் கோபி. யாரையும் அடிக்க மாட்டேன் என்று அம்மாவிடம் சத்தியம் செய்துள்ளார் பிரபாஸ். ஸ்ருதியை கடத்த வந்த கும்பலை ஒருமுறை அம்மாவின் அனுமதியுடன் அடித்து துவைக்கிறார். இரண்டாவது முறையும் காப்பாற்ற பிரபாஸ் யார் என்று கேட்கிறார் ஸ்ருதிஹாசன். ஃபிளாஷ் பேக்கில் கான்சார் என்ற ஒரு நாடு அதில் நடக்கும் மன்னராட்சி, ஆட்சி அதிகாரத்தை பிடிக்க இரண்டு குழுக்களுக்குள் நடக்கும் சண்டை என ஒரு கதை சொல்கிறார்கள். இடையில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இருவரின் நட்பு. நண்பன் பிரித்விராஜுக்கு ஏற்படும் பிரச்சினை நட்புக்காக எதையும் செய்யும் பிரபாஸ் என கதை சொல்லி நம்மை குழப்பி அனுப்புகிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.

பிரசாந்த் நீல் கேஜிஎப் மாதிரி எடுக்கிறேன் என்று கேஜிஎப் படத்தையே‌ மறுபடியும் எடுத்து வைத்துள்ளார். நடிகர்கள்தான் வேறு. கேமரா, கதைக்களம், காட்சி அமைப்பு, இசை எல்லாவற்றிலும் கேஜிஎப் வாடை. படம் முழுவதும் நாயகனுக்கு பில்டப் ஏற்றுக்கொண்டே இருக்கின்றர். முதல் பாதி முழுக்க பில்டப் பில்டப் தான். பிரபாஸ் ஆயிரம் பேரை அடித்து துவைக்கிறார். எதிரிகள் பயங்கர ஆயுதத்துடனும் துப்பாக்கியுடனும் இருக்க சாதாரண கோடரியை வைத்துக் கொண்டு அத்தனை பேரையும் துவசம் செய்கிறார் நாயகன். ஆனாலும் தன்னுடைய கடின உழைப்பை கொடுத்துள்ளார் பிரபாஸ்.

ஸ்ருதிஹாசன் கதைக்கு தேவையேயில்லை. ஃபிளாஷ் பேக் கேட்பதற்காக கதையில் இருக்கிறார். பிரித்விராஜ் மன்னார் பரம்பரையை சேர்ந்தவர். இடைவேளையின்போதுதான் வருகிறார். நல்லவனா வில்லனா என்று குழப்பம் ஏற்படுகிறது. ஒரு வேளை அடுத்த பாகத்தில் இதற்கான விடை தெரியலாம். இதிலும் அம்மா சென்ட்டிமென்ட் வருகிறது ஆனால் எடுபடவில்லை. அம்மாவாக ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, கருடா ராம் ஆகியோர் நடிப்பு நன்று. ரவி பாஸ்ரூர் இசை அப்படியே கேஜிஎப் தான். அன்பறிவு சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப் பெரிய பலம்.

வெத்து பில்டப்களால் நிறைந்த முதல் பாதியும் குழப்பமான மற்றும் தொய்வான இரண்டாம் பாதியும் ரொம்பவும் சோதிக்கிறது. மொத்தத்தில் சலார் – சலிப்பு. ரேட்டிங் 3/5