full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஹீரோக்களின் சுமையை உணர்கிறேன் – “யு டர்ன்” சமந்தா!

“ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன்” சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, “வி.ஒய். கம்பைன்ஸ்” மற்றும் “பிஆர்8 கிரியேஷன்ஸ்” சார்பில் ராம்பாபு பண்டாரு ஆகியோர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கிறார்கள். கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “யு-டர்ன்” படத்தின் ரீமேக் இது. கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய பவன்குமார் தான் தமிழ் மற்ரும் தெலுங்கு இரண்டிலும் இப்போது இயக்கி இருக்கிறார்.

சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்க்கும் திரைப்படம் “யு-டர்ன்”. செப்டம்பர் 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கும் படத்தின் தமிழ் பதிப்பை, “கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்” சார்பில் தனஞ்செயன் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தினார்.

“இந்தப் படம் கன்னடத்தில் இருந்ததை விட, ஒருபடி மேலானதாக இருக்கும். பெரிய பட்ஜெட், பல முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியோடு இப்படம் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கிற்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் மிகவும் திரில்லாக இருக்கும். கன்னட படம் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோதே சமந்தா என்னிடம் பேசினார். அவருக்காக தான் இந்த ரீமேக் படத்தையும் நானே இயக்க ஒப்புக் கொண்டேன். சமந்தா, ராகுல் ஆகியோரிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழ் ரசிகர்கள் பல நல்ல சினிமாக்களை பார்த்தவர்கள், இந்த படத்தையும் அங்கீகரிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்” இயக்குனர் பவன் குமார்.

“வாழ்வில் சில விஷயங்களை நாம் தேர்ந்தெடுப்போம், ஆனால் சினிமாவில் நல்ல கதைகள் நம்மை கேட்கும்போது நடித்து விட வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் மிகச்சிறப்பான படத்தை கொடுப்பது என்பது தான் மிக சவாலான விஷயம். அதனால் தான் பவன் குமார் படம் நடிக்கிறீங்களா” என கேட்டவுடனேயே அவருக்காகவே நடிக்க ஓகே சொன்னேன். சமீப காலங்களில் “காக்கா முட்டை”, “அருவி” போன்ற படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். அது மாதிரியான ஒரு படம் தான் இது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்து 3 தமிழ் படங்களில் நடிக்க போகிறேன், அடுத்த இரண்டு வருடங்கள் சென்னைல தான் இருக்க போறேன்” என்றார் நடிகர் ஆதி.

“டிரைலர் ரிலீஸ் ஆனபோது 2 மில்லியன் பார்வைகள் போகும், ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தருவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதை தான் படத்தின் மிகப்பெரிய ஹீரோ. “லூசியா” படத்தில் இருந்தே நான் பவன் குமாரின் பெரிய ரசிகை. அப்போதே இவருடன் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இந்த படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. இந்த படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்த படத்தை முடித்தோம். தமிழில் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார். இப்போது பாதுகாப்பான கைகளில் இந்த படம் இருப்பதாக உணர்கிறேன். மிகவும் யதார்த்தமாக கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே ஆசை. அது தான் இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு. எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது. கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்த முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியை நடிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் நான் உணர்கிறேன்” என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.