full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மாலை சூடப்போகும் மகிழ்ச்சியில் சமந்தா – நாகசைதன்யா

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர்.

இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர். இந்து, கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணத்தை கோவாவில் நடத்துவது என்றும், அதில் இரண்டு குடும்பத்தினர் மட்டும் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கோவாவில் உள்ள டபிள்யூ தங்கம் விடுதியில் சமந்தா – நாகசைதன்யா திருமணம் நடைபெறுகிறது. நாளை (6-ந்தேதி) இந்து முறைப்படி சமந்தா – நாக சைதன்யா திருமணம் நடக்கிறது. நாளை மறுநாள் (7-ந்தேதி) கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இதற்காக கடந்த ஒரு வாரமாக கோவாவில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருமணத்தையொட்டி, சமந்தா, நாகசைதன்யா இருவரும் 3 நாட்களுக்கு முன்பே கோவா சென்று விட்டனர். அங்குள்ள டபிள்யூ தங்கும் விடுதியில் நடைபெறும் திருமண ஏற்பாடுகளை நேரில் கண்காணித்து வருகிறார்கள். கோவா கடற்கரைக்கு இருவரும் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

நாளை நடைபெறும் இந்த திருமணத்தில் நாக சைதன்யாவின் தாயார், தந்தை நாகார்ஜூனாவின் உறவினர்கள் ராணா, வெங்கடேஷ், சுரேஷ்பாபு, நாக சைதன்யாவின் தாத்தா ராமா நாயுடுவின் மனைவி, நாகார்ஜூனாவின் மனைவி அமலா, இவர்களுடைய மகன் அகில் மற்றும் சமந்தா குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்கள் 183 பேர் மட்டுமே பங்கேற்கிறார்கள்.

சமந்தா திருமண புடவையாக, மும்பையில் நவீன முறைப்படி டிசைன் செய்து மெருகேற்றப்பட்டுள்ள நாக சைதன்யாவின் பாட்டியின் திருமண சேலையைக் கட்டுகிறார்.

திருமணத்துக்காக சமந்தாவுக்கு வாங்கப்பட்டுள்ள விலை உயர்ந்த நெக்லஸ் அணிந்த புகைப்படத்தை சமந்தா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. திருமணம் சிறப்பாக நடைபெறுவது குறித்து சமந்தா, நாகசைதன்யா இருவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய சமந்தா, “திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானது. இந்த வி‌ஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி. என்னைப் பற்றி மிகவும் நன்றாக தெரிந்து கொண்டவரை எனது கணவராக கரம்பிடிக்கிறேன்.

திருமணத்துக்குப் பிறகு என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. காரணம் இப்போது எங்களிடம் இருக்கும் சந்தோ‌ஷமும், புரிதலும் எப்போதும் இருக்கும். எனவே எங்கள் வாழ்க்கைப் பயணம் இனிதாக தொடரும்.” என்றார்.

மகனின் திருமணம் குறித்து நாகார்ஜூனா பேசிய போது, “எனது மகன்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களைத் திருமணம் செய்து வைக்க நான் தயார் என்று சொல்லி இருந்தேன். நாகசைதன்யா அவனது விருப்பத்தைச் சொன்னதும் முழுமனதுடன் ஒப்புக் கொண்டேன். இது எனது குடும்பத்தின் முதல் திருமணம். உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டால் போதும் என்று சைதன்யா சொன்னதால் உறவினர்கள் மட்டும் பங்கேற்க முடிவு செய்தோம்.

வரவேற்பு நிகழ்ச்சி இந்த மாதம் கடைசியில் ஐதராபாத்தில் நடைபெறும். நடிகர், நடிகைகள், திரை உலகின் முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் பங்கேற்பார்கள்.” என்றார்.