நகைச்சுவை நடிப்பிலிருந்து நாயகனாக வளர்ந்துள்ள நடிகர் சந்தானம் பாஜக பிரமுகரைத் தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும், அதற்கு தமிழக பாஜக தலைவரின் கண்டனமும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படித்திருக்கிறது.
முன்னதாக பண விவகாரத்தில் ஆத்திரமடைந்து கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த காரணங்களைக் கேட்டறிந்ததிலிருந்து..
சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் பில்டராக தொழில் செய்து வருகிறார். இவருடன் சேர்ந்து சென்னை குன்றத்தூர் அருகே பெரிய கட்டிடம் ஒன்றைக் கட்ட நடிகர் சந்தானம் முயன்றதாகவும் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அது சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சண்முகசுந்தரத்திற்கும் சந்தானத்திற்கும் இடையே தகராறு இருந்து வந்திருக்கிறது. திடீரென்று நேற்று மாலை சந்தானம் தனது மேனேஜர் ரமேஷுடன் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டதாகவும் மோதலில் அவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த சந்தானம் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகத் தெரிகிறது. இதற்கிடையே நடிகர் சந்தானம் தன்னை தாக்கியதாக வளசரவாக்கம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பின்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சந்தானத்தால் தாக்கப்பட்டவர் பாஜக பிரமுகர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் நடிகர் சந்தானத்தால் பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.