டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசியக் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மதன் பாப் பிரியாணியில் சிக்கன் பீஸ் இல்லாத காரணத்தால் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்குகிறார். அந்த கட்சியில் தமிழக தலைமைப் பொறுப்புக்கு சூரி பொறுப்பேற்கிறார். மறுபுறத்தில் வேலை இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் நாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது நண்பன் யோகி பாபு, சூரியுடன் அந்த கட்சியில் இணைகின்றனர்.
பின்னர் போஸ்டர் அடிக்கும் பிரச்சனை ஒன்றில் சூரிக்கும், அதே ஊரிலேயே அரசியல்வாதியாக இருக்கும் மன்சூர் அலிகானுக்கும் இடையே புதிய பிரச்சினை ஒன்று கிளம்ப, சூரியை கொல்லப்போவதாக மன்சூர் அலிகான் மிரட்டுகிறார். இதனால் சூரி தலைமறைவாகி, பின்னர் உதயநிதியின் அறிவுரைப்படி துபாய்க்கு செல்கிறார். இந்த இடைவெளியில் உதயநிதி கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, இந்த தகவல் மதன்பாப்புக்கு தெரிய வருகிறது. இதையடுத்து கட்சியின் தலைவராக உதயநிதி நியமிக்கப்படுகிறார்.
இந்நிலையில், சிறிய வயதில் ஊரை விட்டு சென்ற நாயகனின் தோழியும், தனது எதிரியுமான ரெஜினா, மீண்டும் உதயநிதி இருக்கும் ஊருக்கு வருகிறார். இருவரும் மீண்டும் சண்டைப்பிடிக்கிறார்கள். எனினும் ரெஜினாவை பார்த்த உடனேயே உதயநிதிக்கு பிடித்து விடுகிறது. அவள் மீது காதல் கொள்கிறார். இந்நிலையில், துபாயில் இருந்து வரும் சூரி, தனது வாழ்க்கையை வீணாக்கியது இவன் தான். இவனை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று உதயநிதிக்கு எதிராக சூரி களமிறங்க, ரெஜினாவும் சூரியுடன் இணைந்து உதயநிதியை தொல்லை செய்கிறார்.
இந்த கூட்டணிக்கு எதிராக உதயநிதிக்கு உதவி பண்ணும் விதமாக, உதயநிதியின் முன்னாள் தோழியான, உயிரிழந்த ஸ்ருஷ்டி டாங்கே ஆவியாக வந்து அவருக்கு உதவி செய்கிறார்.
இறுதியில், ரெஜினா, சூரி கூட்டணி வெற்றி பெற்றதா? ஸ்ருஷ்டி உடன் இணைந்து ரெஜினாவை, உதயநிதி காதலிக்க வைத்தாரா? அவர்களின் அரசியல் பயணம் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை.
முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் அரசியல் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காமெடி கலந்த அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும், நடனம் ஆடுவதிலும் முந்தைய படத்தை விட தற்போது மெருகேறி இருக்கிறார்.
ரெஜினா, படம் முழுக்க ஸ்லீவ்லெஸிலே வந்து ரசிக்க வைக்கிறார். உதயநிதிக்கு எதிராக சூரியுடன் சேர்ந்து ரெஜினா போடும் ஆட்டம் ரசிக்கும் படி இருக்கிறது. ஒரு பாடல் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே அவரது கதாபாத்திரத்திற்கு தேவையானதை பக்காவாக கொடுத்திருக்கிறார்.
யோகிபாபு எப்போதும் போல தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக அவரை பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது, அந்தளவுக்கு தனது முக பாகுபாடுகளை காட்டுகிறார். காமெடி வில்லனாக நடித்திருக்கும் சூரி இப்படத்தில், உதயநிதிக்கு எதிராக செயல்படுகிறார். மன்சூர் அலி கான் காமெடி கலந்த வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.
மற்றபடி லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், சாம்ஸ், ரவி மரியா என அனைவரும், அவரவர் பங்குக்கு படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளனர்.
கே.ஜி.வெங்கடேசின் ஒளிப்பதிவு தெளிவாக இருக்கிறது. காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டி.இமானின் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்களை பார்ப்பதற்கும் ரசிக்கும்படி இருக்கிறது.