ஆட்டுத்தோல், மாட்டுத்தோல், எருமைத் தோல் என தோல்களை வைத்து மிருதங்கள் தயாரிக்கும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜான்சண்(குமரவேல்). இவரது மகன் பீட்டர் ஜான்சண்(ஜி வி பிரகாஷ்). நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர், அவருடைய கட்-அவுட்டுகளுக்கு பால் ஊற்றுவது, ரத்ததானம் செய்வது என தீவிர ரசிகராக இருந்து வருகிறார் பீட்டர்.
மிருதங்க சக்ரவர்த்தியாக கர்நாடிக் இசையில் பல விருதுகளை பெற்ற மூத்த இசைக் கலைஞர் வேம்பு ஐயர்(நெடுமுடி வேணு). ஜான்சண் தான் புதிதாக தயாரித்த மிருதங்கத்தை தனது மகன் பீட்டரிடம் கொடுத்து நெடுமுடி வேணுவிடம் கொடுக்க சொல்கிறார்.
பீட்டரும் அந்த மிருதங்கத்தை கொடுக்க செல்லும் போது, நெடுமுடி வேணு அந்த மிருதங்கத்தில் வாசிப்பதையும் அவருக்கு கிடைக்கும் பாராட்டையும் கண்டு வியந்து போகிறார் பீட்டர்.
தானும், இது போல் பெரிய மிருதங்க சக்ரவர்த்தியாக திகழ வேண்டும் என்று எண்ணுகிறார். இதற்காக, நெடுமுடி வேணுவிடம் கர்நாடிக் இசை கற்றுக் கொள்ள நினைக்கிறார் பீட்டர். நெடுமுடி வேணுவிடம் உதவியாளராக பணிபுரியும் வினித், பீட்டரை கடுமையாக எதிர்க்கிறார். அவரின் சாதிய தீயை அவர் மீது காட்டுகிறார்.
பல போராட்டங்களுக்குப் பிறகு நெடுமுடி வேணுவிடம் மாணவனாக சேர்ந்து விடுகிறார் பீட்டர். இதனால் வினித், நெடுமுடி வேணுவை விட்டு பிரிகிறார்.
பீட்டர் மிருதங்கம் கற்றுக் கொண்டு பேரும் புகழும் அடைகிறானா, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் இசையுலகில் ஜெயித்தானா, மிருதங்கம் கற்றுக்கொள்ள இந்த சமூகத்தில் உள்ள சாதிய பிரச்னையை எப்படி எதிர் கொண்டார் என்பதே படத்தின் மீதிக் கதை.
இசை என்பது யாருக்கும் சொந்தம் இல்லை என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் கூறியிருக்கிறார் இயக்குனர் ராஜீவ் மேனன். விஜய் ரசிகராக தன்னைக் காட்டிக் கொள்வதில் ஆரம்பித்து கர்நாடிக் இசைக் கலைஞனாக மாற்றிக் கொள்ளும் வரை நகர்ந்த கதாபாத்திரம் ஜி வி பிரகாஷுக்கு உரித்தான கதையாக தெரிகிறது. அதற்கான மெனக்கெடல், உழைப்பும் வீணாகவில்லை. 100 சதவீத நடிகனாக தன்னை நிரூபித்திருக்கிறார்.
ஆங்காங்கே தெறிக்கும் வசனங்கள் ”பேனா தயாரிக்கிறவனெல்லாம் கவிஞர் ஆகிவிட முடியாது’, என பல இடங்களில் கைதட்ட வைக்கின்றன. ஏ ஆர் ரகுமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இசையோட சேர்ந்த படம் என்பதால், இசைக்கு மிக அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘ டிங்கு டாங்கு’ எனத் துவங்கும் பாடல் ஆட்டம் போட வைத்து சிந்திக்க வைத்துவிடுகிறது. நெடுமுடி வேணு தன்னை ஒரு நடிப்பு ஜாம்பவான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
வினித், குமரவேல், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வரும் டிடி(திவ்யதர்ஷினி) என அனைவரும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரம் தான். நாயகி அபர்ணா முரளிக்கு பெரிதான இடம் இல்லை என்றாலும், வரும் சில காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். சாதித் தீண்டலை ஒரு டீ கடையில் குடிக்கும் டம்ளரில் காட்டி விடுகிறார் இயக்குனர். சங்கீதம் எந்தவொரு சாதி(தீ)க்கும் சொந்தமில்லை என்பதை பலருக்கும் இப்படம் புரிய வைத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரவியின் கேமரா காட்சிக்கு காட்சி அசத்தியெடுத்திருக்கிறது. கலர்புல்..
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டிற்கு வந்தாலும், அதே சுவை மாறாமல் ஒரு விருந்தை படைத்திருக்கிறார் இயக்குனர் ராஜீவ் மேனன்.
சர்வம் தாளமயம் – நல்ல படம்…