full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

சசிகலா நியமனம் ரத்து : அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. (அம்மா) என்றும், அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) என்றும் 2 ஆக உடைந்த அ.தி.மு.க. சமீபத்தில் ஒன்றாக இணைந்தது.

இதற்கு டி.டி.வி.தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் குழு-செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

8-வது தீர்மானமாக சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள் :

* இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க. பெயரையும் மீட்டெடுத்து, கட்சியை வெற்றிப்பாதையில் நடத்திச் சென்றிட இப்பொதுக்குழு உறுதி ஏற்கிறது.

* ஜெயலலிதாவால் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும், அமைப்புத் தேர்தல்கள் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கழக நிர்வாகிகளும் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து செயல்பட இந்த கூட்டம் ஒப்புதல் வழங்குகிறது.

* தமிழர்களின் வாழ்வோடு நீக்கமற நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டினை சிறப்புற கொண்டாடிவரும் தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும் இந்த கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

* ஜெயலலிதாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும் இந்த கூட்டம் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.

* புயல், வெள்ள பாதிப்புகளில் இருந்தும், வரலாறு கண்டிராத வறட்சியில் இருந்தும் தமிழகத்தை காப்பாற்றி அனைத்து வகையான நிவாரணப் பணிகளையும் சிறப்புற மேற்கொண்ட தமிழக அரசுக்கு இந்த கூட்டம் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது.

* ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாற்றாருக்கும், எதிரிகளுக்கும் இடம் தராமல் கட்சியையும், ஆட்சியையும் கட்டுக்கோப்பாக காப்பாற்றி வழி நடத்திச் செல்லும் கழக நிர்வாகிகளுக்கு இந்த கூட்டம் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது.

* அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இந்த இரு பெரும் தலைவர்கள் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் ஒருபோதும் நிரப்ப முடியாது என்ற காரணத்தால், இனி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு இல்லை என்று முடிவெடுத்து அந்த பதவியை ரத்து செய்கிறோம்.

அதற்கு ஏற்ப, அ.தி.மு.க. சட்டதிட்ட விதி எண்.43-ல் திருத்தம் செய்யப்படுகிறது. இந்த திருத்தங்களை கழக பொதுக்குழு ஏகமனதாக ஏற்று ஒப்புதல் அளிக்கிறது.

* ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணமும், கழகத்தின் கட்டுப்பாட்டினை சீர்குலைக்கும் நோக்கத்தோடும் டி.டி.வி.தினகரன் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவது மற்றும் புதிதாக நியமிப்பது குறித்து வெளியிடும் எந்த அறிவிப்பும் செல்லத்தக்கதல்ல.

அவை அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளுக்கு ஏற்புடையவையும் அல்ல என்று இப்பொதுக்குழு உறுதிபட தெரிவித்துக்கொள்கிறது.

* ஜெயலலிதாவின் எண்ணப்படி மக்கள் பணியாற்றும் வண்ணம் அ.தி.மு.க.வை வழி நடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை உருவாக்க இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. கழக பொதுக்குழு உறுப்பினர்களால், அமைப்பு தேர்தல் மூலம், கழக ஒருங்கிணைப்பாளரும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

கழக அமைப்பு தேர்தல் நடைபெறும் வரை ஜெயலலிதாவின் நம்பிக்கையினை பெற்று பல ஆண்டுகள் கழக பணியாற்றி வந்திருக்கும் பொருளாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், தலைமை நிலையச் செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட இப்பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது.

பொதுச்செயலாளருக்கு கழக சட்டதிட்ட விதிகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முழுமையாக பெற்று கழகத்தை வழிநடத்துவார்கள். இரண்டு துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்படவும், அவற்றில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்படவும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

* அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி, பொதுச்செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொறுப்புகளும், அதிகாரங்களும், ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக வழங்கப்படுவதற்கு இப்பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கும், அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து வரவு செலவுகளுக்கும் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட வேண்டிய பார்ம் ஏ, பார்ம் பி உள்ளிட்ட அனைத்து வகை ஆவணங்களிலும் மற்றும் கட்சி தொடர்புடைய அனைத்து அறிவிப்புகளிலும், நியமனங்களிலும் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளிலும், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து, இருவரும் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

இந்த கூட்டம் பகல் 1.30 மணிக்கு முடிவடைந்தது.