முன்னோரு காலத்தில் நாட்டாமை வேடம் என்றாலே எல்லா இயக்குநர்களும் நேராக விஜய குமார் வீட்டிற்குப் போய் விடுவார்கள். விஜய குமார் முடியாதென்றால் தான் வினு சக்ரவர்த்தி, சண்முக சுந்தரம் எல்லாம்! அதேபோல் காதல் கதைகளோடு நவரச நாயகன் கார்த்திக் வீட்டின் முன்னால் காத்துக் கிடந்த இயக்குநர்கள் ஏராளம் ஏராளம்.
அந்த வகையில் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென்மாவட்டங்களில் இருந்து “மண் பெருமை” பேசக்கூடிய கதைகளைத் தயாரித்து வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் உலவும் இயக்குநர்களின் முதல் தேர்வும், அடுத்த தேர்வும் சசி குமார் மட்டும் தான். “சுப்ரமணிய புரம்” முதல் இப்போது நடித்து முடித்திருக்கும் “கொடி வீரன்” ( வெற்றிவேல், நாடோடிகள், பிரம்மன் ) வரை அலுத்து சலிக்காமல் மனிதர் “மண் பெருமை” இயக்குநர்களை வாழ வைக்க தன்னை வருத்திக் கொண்டு உழைத்து வருகிறார்.
இதோ அடுத்த படம் “அசுரவதம்” ஆரம்பித்து விட்டார்கள். அது என்னவோ தெரியவில்லை, அந்த முறுக்கு மீசைக்கும் சசி குமாருக்கும் அவ்வளவு ராசி பொருத்தம் போல. இன்னும் எத்தனை இயக்குநர்கள் சசி குமாரை வதம் செய்ய அவர் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்களோ?. இந்த “மண் பெருமை” எல்லாம் தன்னை நீண்ட தூரம் அழைத்துப் போகாது என்பதை சசி குமார் உணர்ந்தால் அவருக்கும் நல்லது, அவரது படங்களை சலிக்காமல் திரையரங்கில் பார்க்கிற நமக்கும் நல்லது.
முரட்டுத் தோற்றம்,முறுக்கு மீசை, கொஞ்சம் அம்மா பாசம், நிறைய “மண் பெருமை” …என தெரிந்தே ஒரே கோட்டில் பயணிக்கிறாரா? இல்லை தெரியாமல் பயணிக்கிறாரா? என்பது அவர் சார்ந்தவர்களுக்கும், அவருக்கும் மட்டுமே வெளிச்சம்.
வன்முறையும் ரத்தமும் தெறிப்பதாகவே இருந்தாலும், சுப்ரமணிய புரம் படத்தின் நேர்த்தியான இயக்கம் என்பது இன்று வரை பல இயக்குநர்களும் வியக்கக் கூடியது என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதேபோல் “பசங்க” போன்ற படங்களை தயாரித்த அக்கறையும், அப்போது சசிகுமார் பேசிய கருத்துமிகு பேச்சுகளும் அவர் மீது உருவாக்கி வைத்திருந்த மரியாதையான பிம்பம் இப்போது உடைந்து போயிருக்கிறதோ என்ற வருத்தமும் நமக்கு மேலோங்குகிறது.
“அசுரவதம்” படமும் வழக்கமான பெருமைகளைப் பேசும் முறுக்கு மீசை படம்தான் எனில் ரசிகனின் மனதிலிருந்து சசிகுமார் என்னும் நல்ல கலைஞன் வதமாகப் போவது உறுதி!